சென்னை:  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு விடுமுறை தினம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.  அதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறையும், 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​தமிழகத்தில் உள்ள   அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில்  படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.  நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன.  இதையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. நடப்பாண்டு முதல், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொதுக்கேள்வித்துறை முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து காலாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. உடனே காலாண்டு விடுமுறை தொடங்கி விடுகிறது.

இதுதொடர்பாக  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை தான். அதாவது 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. 1 – 3 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதலும், 4 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதலும் ஆரம்பித்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி பொது விடுமுறை வரையில் முறையே 10 நாட்கள் மற்றும் 5 நாட்கள் என காலாண்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ன.

அதாவது, செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி என்பதால் அரசு விடுமுறை. 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரே ஒரு நாள் தான் தேர்வு விடுமுறை எனக் கூறும் வகையில் அமைந்துள்ளது. செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகியவை சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களாக வந்துவிடுகிறது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை ஆகும். இதையடுத்து அக்டோபர் 3 செவ்வாய் அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

முன்பெல்லாம் காலாண்டு விடுமுறை குறைந்தது 1வாரம் அறிவிக்கப்படும். ஆனால் சமீப ஆண்டுகளாக காலாண்டு விடுமுறை தினங்கள் குறைக்கப்பட்டு வருவதுடன், விடுமுறை காலங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், ஆசிரியர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 16ஆம் வரையிலான காலகட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 7 – 29 வரை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு குழு சார்ந்த பயிற்சியும், செப்டம்பர் 7 – 9 வரை பள்ளி துணை ஆய்வாளர்களுக்கு மன்ற செயல்பாடுகள் தொடர்பான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் 11 – 16 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியில் துறை பயிற்சி வழங்கப்படுகிறது. ​உயர்கல்வி வழிகாட்டுதல் செப்டம்பர் 11 – 15 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட BRTE மற்றும் DIET விரிவுரையாளர்களுக்கு புத்தாக்கம் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

செப்டம்பர் 19 – 20 ஆகிய நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9, 10ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி நடக்கிறது. ​

எண்ணும் எழுத்தும் பயிற்சி செப்டம்பர் 25 – 27 வரை 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அக்டோபர் 3 – 9 காலகட்டத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.