
இதுவரை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான எந்தவொரு போராட்டத்திலும் கலந்துகொள்ளாத திரைப்பாடலாசிரியர் வைரமுத்து இன்று ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் இன்று சென்னையில் சென்னை – கொல்கத்தா அணிகளுக்கிடையே ஐ.பி.எல். போட்டி நடந்துகொண்டிருக்கிறது.
முன்னதாக இந்த போட்டியை நடத்தக் கூடாது என்றும் இது போராட்டத்தை திசை திருப்பும் என்றும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தின. ஆனாலும் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் போட்டியை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் கூடி போராட்டம் நடத்தினர்.
சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் அனைத்து வழிகளையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்தில் திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவும் கலந்துகொண்டார். இது பல தரப்பினரையும் அதிர்ச்சி அடையைச் செய்துள்ளது.
இது குறித்து கூறுபவர்கள், “ இதுவரை அரசுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திலும் வைரமுத்து கலந்துகொண்டதில்லை. 2009ம் ஆண்டு இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோதுகூட, வார்த்தைகளை அளந்தே பேசினார் வைரமுத்து. தமிழ், தமிழர் என்று பேசும் வைரமுத்து, அந்த நேரத்தில் நாவடக்கத்துடன் நடைபயின்று வந்தார். இந்த நிலையில் ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தில் அவர் கலந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவிக்கிறார்கள்.
மேலும், “வைரமுத்து எப்போதுமே ஆளும் தரப்பை எதிர்த்துக்கொள்ளமாட்டார். பிரதமர் மோடி சிறந்த கவிஞர், பொட்டுவைத்த வேல் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்றெல்லாம் ஆளும்தரப்பை புகழ்ந்து, விருதுகளைப் பெறுபவர் வைரமுத்து என்கிற கருத்து உலவும் நிலையில் இன்று அவர் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது” என்றும் கூறுகிறார்கள்.