டந்த இரண்டாம் அத்தியாத்தில்,  ஐ.பி.ஆர்.எஸ். என்றால் என்ன அது  எப்படி படைப்பாளிகளை வஞ்சிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்களை பார்த்தோம் இந்த அத்தியாத்தில் பி.பி.எல். என்பது பற்றி பார்ப்போம்.

IPRS என்பது கன்னத்தில் அடிக்கிறது என்றால், படைப்பாளர்களின் புடனையில் அடிக்கிறது PPL.

இது என்ன புதுக் கூத்து என்கிறீர்களா..? காசும் – ப்ரச்சினையும் எங்கிருக்கிறதோ அங்கு பசித்த கழுகாய் பஞ்சாயத்துக்கு பறந்து வராமலா இருப்பார்கள்…!? அப்படி வந்து இறங்கியதுதான் PPL

ஒரு படைப்புக்கு யார் உரிமையாளர் என்பதில் இது ஒரு நூதனமான வார்த்தையை போட்டது.

“அந்த படைப்பை யார் முன்னெடுக்கிறார்களோ, அவர்களே அதன் உரிமையாளர்கள்…” என்றது.

குழப்பமாக இருக்கிறதா..? ஆமாம், குழப்பினால்தானே குட்டையில் மீன் பிடிக்க முடியும் !

இந்த இரண்டு அமைப்புகளுமே முறையானதா என்றால்…இல்லவே இல்லை.

Section 33 (3A) ன் படி காபிரைட் போர்டுக்கு  இரண்டுமே தங்களது வரவு செலவு கணக்குகளை முறைப்படி அளிக்கிறதா என்றால் இல்லவே இல்லை. இந்த இரண்டு அமைப்புகளின்மீது நாடு முழுவதும் ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. ஆனாலும், ஏன் அரசாங்கம் இன்னும் இவர்களை தட்டிக் கேட்காமல் இருக்கிறது என்று கேட்டீர்களேயானால், அதற்கு நம்மிடம் பதிலில்லை !

“டெல்லி ஆர்ட்ஸ்ட் செஸைட்டி” என்று ஒன்று இருக்கிறது. புகழ் பெற்ற கர் நாடக – இந்துஸ்தானி – கஜல் பாடகர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ப்ரஸ் மீட் வைத்து IPRS ஐயும் IPL ஐயும் புழுதி வாறித் தூற்றுவார்கள். “மோசடிப் பேர்வழிகளே…. நீங்கள் யார் எங்களுக்காக காசு வசூலிக்க…?” என்று சொக்காயை பிடிக்காத குறையாக கதறுவார்கள்.

பெரிதாக ஒன்றும் பலனிருக்காது என்று தெரிந்தாலும், தங்கள் வயிற்றேரிச்சலைத் தீர்த்துக் கொள்ள ஒரு சடங்காகவே இதை செய்து ஓய்வார்கள்.

கிட்டத்தட்ட, ஜல்லிக்கட்டை தடை செய்த பீட்டா போல  IPRS – IPL  போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே பரிவட்டம் கட்டிக் கொண்டு நாடு முழுவதும் பஞ்சாயத்து செய்து கொண்டும் கல்லா கட்டிக் கொண்டும் கொழுக்கிறார்கள்.

ஒரே வித்தியாசம், மாட்டுக்கு பதிலாக இங்கே கலைஞர்கள் !

இந்த ஊழலை எதிர்த்து,வட நாட்டில் புகழ் பெற்ற பாடலாசிரியர் “ஜாவேத் அக்தர்” பல ஆண்டுகளாக கரடியாய் கத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், முதைய காங்கிரஸ் அரசாங்கமும், இன்றைய பிஜேபி  அரசாங்கமும் வாய் மூடிக் கொண்டு பாராமுகமாகவே இருக்கிறது.

இந்த வகையில் வட நாட்டை நாம் பாராட்ட வேண்டும். கொஞ்சமாவது குரல் கொடுக்கிறார்கள். நமது தமிழ்நாட்டில்… இதிலும் கூட சொரணை இல்லாமல்தான் இருக்கிறார்கள் !

கஞ்சி குடிப்பதற்கிலார் ;

அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார் !

என்ற பாரதியின் புலம்பல் இன்னுமா நின்று நிலைக்க வேண்டும்…?

ஐந்தாண்டுக்கு ஒரு முறை படாடோபமாக வந்திறங்கும் அரசியல்வாதிகளுக்கு முன் மக்கள் மௌனித்துப் போவது போல….

ஆண்டுக்கு ஒருமுறை ஸ்டார் ஓட்டல்களில் கோட்டும் சூட்டுமாய் வந்து இறங்கி, ஆங்கிலத்தில் அழைத்து, ஹிந்தியில் வரவேற்று , காக்டெய்லும் – பொஃப்ஃபேவுமாக அவர்கள் செய்யும் ஆர்பாட்டத்தில் கையில் திணிக்கும் “செக்” கில் என்ன எழுதியிருக்கிறது என்று கூட தெரியாமல் வீடு திரும்பும் நம்மவர்களை என்னவென்று சொல்வது.

இளையராஜா தவிர வேறு யாரும் இவர்களை அதட்டிக் கேட்கவேயில்லை. அவரையும் கூட கொச்சைப் படுத்தி வட நாட்டு கொள்ளைக்காரர்களுக்கு வால் பிடிக்கிறார்கள் என்பதைக் காணும் போது, அவலச்சுவை அதன் உச்சத்துக்கு போய் கெக்கலிக்கிறது !

“திறமைசாலிகளே, திறமை சாலிகளே… ஏன் நீங்கள் அயல் நாட்டுக்கு செல்கிறீர்கள்….? இங்கேயே இருந்து, நமது பாரத தேசத்துக்காக உங்களது மேலான திறமைகளை பயன்படுத்தக் கூடாதா….?” என்று மேடைதோறும் வேண்டுகோள் வைக்கிறார் பாரதப் பிரதமர் மோடி  !

நல்ல கலைஞர்கள் வாழும் படியா இருக்கிறது இந்த நாடு…?

“பெண்கள் நிம்மதியாக இருந்தால்தான் வீடு செழிக்கும் ; போலவே கலைஞர்கள் நிம்மதியாக இருந்தால்தான் நாடு செழிக்கும்” என்று சமஸ்கிருத சொலவடை ஒன்று உண்டு ! மோடிக்கு தெரியாத சொலவடைகள் இல்லை ! அரசாங்கம் முனையாமல் இதற்கு தீர்வில்லை !

இதுவரை நாம் கண்டதெல்லாம்… வெளி உலகின் கவனத்தைக் கவர்ந்த, மேல்வர்க்கத்தை சேர்ந்த சங்கீத கலைஞர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்களின் துயரம்.

இளையராஜாவின் புண்ணியத்தால், காலம் தாழ்த்தியாவது இது அவையேறி விட்டது ! ஓர் நாளில் தீர்வும் கண்டு விடும் !

ஆனால் இதனையெல்லாம் கடந்த பேரவலம் ஒன்றுண்டு  !

அந்தப் பேரவலத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களின் மெல்லிய முனகலோ, கல்லுக்குள் சிக்கி அம்படிபட்ட தேரையின் முனகலைப் போல வெளி உலகுக்கு இன்னமும் கேட்காமலேயே இருக்கிறது.

முனகும் தேரையின் முதுகில் குத்தியிருக்கும் அந்த அம்பில், அதை செலுத்திய சூத்திரதாரியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

SIMCA…!!

(அதிர்ச்சிகள் தொடரும்)