மும்பை

ராகுல் காந்தி குஜராத் தேர்தலால் திறமையான தலைவர் ஆகி உள்ளதாக சிவசேனா கூறி உள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக வரும் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.   மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் படு தீவிரமாக நடைபெறுகிறது.   காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.   பா ஜ க வின் இந்துத்வா பிரசாரத்துக்கு எதிராக அவர் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்.

பாஜகவின் தோழமைக் கட்சி என சொல்லப்படும் சிவசேனாவின் அதிகார பூர்வ நாளேடான சாம்னா இது குறித்து, “பாஜக வால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என கருதப்பட்ட மாநிலத் தேர்தல் தற்போது வெற்றி பெறுமா என சிந்திக்க வைத்துள்ளது  ராகுலின் பிரசாரத்தால் தான்.   இந்த தேர்தலின் மூலம் அவர் ஒரு திறமையான தலைவராக உருவெடுத்துள்ளார்.    அவரின் இந்த வளர்ச்சி மோடியை சிறிது தளர வைத்துள்ளது.   தன்னை பப்பு (சிறுவன்) என அழைத்தவர்களை தான் சிறுவன் அல்ல என ராகுல் உணர வைத்துள்ளார்.   பாஜக இதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டிய நிலையில் உள்ளது.

ராகுலுக்கு பெரும் கடமை காத்திருக்கிறது.    தற்போது நாடெங்கும் காங்கிரஸ் நிலை மிக மோசமாக உள்ளது.   பாஜக தனக்காக ஒரு அரசியல் மாயையை உருவாக்கி உள்ளது.  அதை உடைத்து ராகுல் காந்தி தனது கட்சியை வெற்றிப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும்.   ராகுல் காந்தி கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது இந்துத்வாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என கருத்து வெளியிட்டுள்ளது.