மும்பை
இந்தியாவில் உண்மையாகவே 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதா என சிவசேனா சந்தேகம் எழுப்பி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பல உலக நாடுகள் இந்தியாவுக்குப் புகழாரம் சூட்டி வருகின்றன. பில்கேட்ஸ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிவசேனா கட்சி இந்தியாவில் 100 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளது. சிவசேனா கட்சி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
அப்போது சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம், “இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஊறுவது உண்மையில்லை. உண்மையில் 23 கோடி டோஸ்களுக்கு மேல் தடுப்பூசிகள் போடப்படவில்லை என ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார்” எனத் தெரிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.