லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.
‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சண்டைப் பயிற்சிக்கு இரட்டையர்களாக அன்பறிவ் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
கமலுக்கு மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் நடிப்பதாக தகவல் வெளிவந்தது.ஷிவானி வரும் 24-ம் தேதி காரைக்குடியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் எனவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்த ஷிவானி, தற்போது முதன்முறையாக இதனை உறுதி செய்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய ஷிவானியிடம் ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கேரவனில் தனது பெயர் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி. இதன்மூலம் விக்ரம் படத்தில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.