வழக்கம் போல பழிவாங்கும் ஆவி, பயப்படும் லாரன்ஸ், கொஞ்சம் திகில், நிறைய காமெடி என்று அக்மார்க் லாரன்ஸ் படம்.
ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடக்கிறார் சக்தி. அது கொலையா தற்கொலையா என்று துப்பறிய வருகிறார் லாரன்ஸ்… சிவலிங்கேஸ்வரன். அவருக்கு ஒரு புறாவும், கொலை செய்யப்பட்டவரின் ஆவியும் உதவுகின்றன.
இதற்கிடையே ரித்திகாவிற்கு பேய் பிடிக்கிறது,
புறா ஏன் கொலைகாரனை கண்டுபிடிக்க உதவிக்கு வருகிறது, கொலை செய்தது யார், ரித்திகாவுக்கு பேய் பிடிப்பது ஏன்.. இப்படி பல முடிச்சுகள்.
இன்னும் எத்தனை படத்தில்தான் பேய் பிடித்தமாதிரி (!) ஆடுவாரோ லாரன்ஸ்… இந்தப் படத்தின் அறிமுகப்பாடலிலும் அப்படி ஓர் ஆட்டம்.
முந்தைய மொ.சி. கெ.சி. படத்தில் “மக்கள் சூப்பர் ஸ்டார்” என்று டைட்டிலில் போட்டு, பிறகு ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் எடுத்வர்… இந்த படத்தில் “சின்ன கபாலி” என்று ஆடுகிறார். பின்னணியில் கபாலி பட போஸ்டர்.
’தலைவனுக்கு பாம்புன்னா பயம், எனக்கு பேய்ன்னா படம்’ என்று ரஜினி ரசிகர்களைக் கவர முயற்சிக்கிறார்.
காப்பிரைட் சட்டப்படி (?) தன் சொத்து முழுவதையும் ரஜினிக்குத்தான் இந்த லாரனஸ் எழுதி வைக்க வேண்டும்.
பேய் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாதுதான். அதையும் மீறி கண்ணுக்குத்தெரியும் ஓட்டைகள் நிறைய!
படத்தில் போகிற வருகிற கேரக்டர்களில் எல்லாம், “ஐயம் எ சிஐடி போலீஸ்” என்று ஐடி கார்டை நீட்டுகிறார். இடைவேளை நேரத்தில் கேன்டீனுக்கு வந்து டீ மாஸ்டரிடம் ஐ.டி. கார்டை காட்டாததுதான் பாக்கி.
ஆனால் தான் ஒரு ரகசிய போலீஸ் என்றும், அது தனது அம்மாவைத்தவிர யாருக்கும் தெரியாது என்றும் மனைவி ரித்திகாவிடம் சீரியஸாக சொல்கிறார் லாரன்ஸ்.
பட்… அவரது மாமனார் ஜெயபிரகாஷூக்கு மட்டும் இந்த விசயம் கட்டக் கடைசியில்தான் தெரியவருகிறது. தவிர, . ‘உங்க கிட்ட உண்மையை மறைச்சிருக்க கூடாது’ என்கிறார்.
இப்படி நிறைய ஓட்டைகள்!
பேய் புகுந்த ரித்திகா மிரட்டுகிறார்.
பீடி பிடித்தபடியே, லாரன்ஸை மிரட்டும் காட்சியும் ரசிக்க வைக்கிறது.
மீண்டும் சிறு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு. சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் அழவும் வைக்கிறார். தலைவர் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை.
தவிர எல்லாமே பல படங்களில் பார்த்து அலுத்த காமெடி காப்பிகள்.
ராதாரவி , ஊர்வசி, பானுப்பிரியா, சந்தானபாரதி என்று நிறைய கதாபாத்திரங்கள். ஆனாலும் நிறைவான அளவான நடிப்பு.
சக்தியை தனியாக குறிப்பிட வேண்டும். ரஹீம் என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
எஸ்.எஸ்.தமன் இசையில் தெலுங்கு வாடை. ‘ரங்குரக்கரா..’ பாடலும் ‘சிவலிங்கா..’ பாடலும் ஓரளவு ரசிக்க வைக்கின்றன.
திகில் படம் என்றால் பின்னணி இசையை இப்டி அதிரவைக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
சர்வேஸ் முரளியின் ஒளிப்பதி பக்கா.
இடையிடையே சில காட்சிகள் சுவாரஸ்யப்படுத்தினாலும் பெரும்பாலும் பழைய காட்சி அமைப்புகள், தெளிவற்ற திரைக்கதை என ரசிக்கவைக்கவில்லை சிவலிங்கா.
பேஸ்புக் பதிவு ஒன்றில் பார்த்த பதிவை இங்கே சொல்லலாம்:
சிவலிங்கா மாதிரி படங்கள்ல நடிக்காம இருங்க லாரன்ஸ் சார்.
இதுவே இந்த சமுதாயத்துக்கு நீங்க செய்யற மிகச் சிறந்த சேவை.
மத்தபடி போராட்டத்துக்கு உதவறது, புடலங்காய் புடுங்கிறது.. இதெல்லாம் தேவையே இல்லே.