டில்லி

க்களவை துணை சபாநாயகர் பதவியை தங்கள் கட்சிக்கு அளிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 302 இடங்களைப் பெற்று அறுதி பெரும்பான்மை அடைந்துள்ளது.  பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா அக்கூட்டணியில் அதிக இடம் பெற்ற இரண்டாவது கட்சி ஆகும்.   எனவே ஆளும் பாஜகவுக்கு சிவசேனா மூன்று கோரிக்கைகள் விடுத்துள்ளது.

சிவசேனா கட்சி மக்களவை உறுப்பினரான அரவிந்த் சாவந்த் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.  அவருக்கு கனரக தொழிற்சாலை மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகிய பொறுப்புக்கள் அளிக்கபட்டுள்ளன.   ஆனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தங்கள் கட்சி அமைச்சருக்கு வலுவான துறை ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை துணை சபாநாயகராக பிஜு ஜனதாதளம் கட்சியின் பர்த்ருஹரி மேதாப் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.   பிஜு ஜனதா தளம் பாஜகவின் கூட்டணிக் கட்சி இல்லை.   மேலும் அந்த கட்சிக்கு 12 மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.   ஆகவே சிவசேனா கட்சி தங்கள் கட்சி உறுப்பினருக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது

மக்களவை சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ரவுத், “மக்களவையில் பாஜக தனித்து பெரும்பான்மை பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.  அதே நேரத்தில் மற்ற கூட்டணி கட்சியின் பலத்தையும் பாஜக நினைவில் கொள்ள வேண்டும்.”  என தெரிவித்துள்ளார்.

தற்போது பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 18  மக்களவை உறுப்பினர்களும் 3 மாநிலங்களவை உறுப்பினரும் உள்ளனர்.  அதை சுட்டிக் காட்டிய ரவுத் அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் அளிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.