ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியில் அசோக் கெலாத்துக்கு பதில் சச்சின் பைலட் நியமிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரித்விராஜ் மீனா கூறி உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைதேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி ஒரு தொகுதியிலும் வென்றது.   பாஜக வை எதிர்த்து போட்டியிட்ட ராஜஸ்தான் மாநில ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது.

இதை ஒட்டி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே கடும் சர்ச்சை நிலவி வருகிறது.   இந்த தேர்தலில் அசோக் கெலாத்  தனது மகன் வைபவ் கெலாத் தோல்விக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான சச்சின் பைலட் பொறுப்பு ஏற்க வேண்டும் என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

இதற்கு தோடாபீம் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரித்வி ராஜ் மீனா, “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடம் கூட காங்கிரஸ் வெற்றி பெறாததால் அசோக் கெலாத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி சச்சின் பைலட்டை முதல்வர் ஆக்க வேண்டும்.

ஆட்சியில் உள்ள கட்சி தோல்வி அடைந்தால் அதற்கு முதல்வர் பொறுப்பு ஏற்க வேண்டும்.   அதே நேரத்தில் எதிர்க்கட்சியாக உள்ள கட்சி தோல்வி அடைந்தால் அதற்கு கட்சி தலைவர் பொறுப்பு ஏற்க வேண்டும்.  இதுவே நடைமுறை ஆகும்” என தெரிவித்துள்ளார்.