மும்பை
பாஜக தலைவர் மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் எனத் தெரிவித்து வருவதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் சிவ்சேனா கூட்டணி பெரும்பான்மை பெற்ற போதும் அக்கட்சிகளுக்கு இடையில் உள்ள அதிகார பங்கீடு தகராறு காரணமாக மாநிலத்தில் இன்னும் ஆட்சி அமைக்க இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.
பாஜகவின் முத்த தலைவர் சுதிர் முங்கண்டிவார், வரும் 7 ஆம் தேதிக்குள் அரசு அமைய வேண்டும் எனவும் அவ்வாறு இல்லை என்றால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இது சிவசேனா கட்சியினர் இடையே கடும் கோபத்டை உண்டாக்கி உள்ளது. இதை தாக்கி சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது
அந்த தலையங்கத்தில்,”அரசியல் ஆதாயம் அடைவதற்காக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துவது போன்ற அச்சுறுத்தல் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்ட நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத்தலைவா ஆட்சியை அமல்படுத்துவதாக பாஜக அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமைச்சரது பேச்சு மகாராஷ்டிர மாநிலத்துக்கே அவமானமாகும். குடியரசுத் தலைவர் என்ன பாஜகவின் கைப்பாவையா? அல்லது மகாராஷ்டிரத்தில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாவிட்டால் அங்கு குடியரசுத்தலைவா ஆட்சியை அக்கட்சியால் அமல்படுத்த இயலும் என்று மக்களுக்குத் தெரியப்படுத்த பாஜகவினர் முயல்கிறார்களா?
அமைச்சர் சுதிா் முங்கண்டிவாரின் பேச்சு ஜனநாயகத்துக்கு விரோதமானதும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதும் ஆகும். அமைச்சரது பேச்சிலிருந்து அரசியல் சாசனம் குறித்து அவருக்கு எதுவும் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. அரசியல் விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒருவரின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவதற்கான அச்சுறுத்தலாகவே இதைப் பார்க்க முடிகிறது. மக்களின் தீர்ப்பை அவமானப்படுத்தும் வகையில் முங்கண்டிவாரின் பேச்சு அமைந்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் ‘ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லாவிட்டாலும் நாங்கள் தான் ஆட்சியமைப்போம். வேறு எவரும் ஆட்சியமைக்க முயற்சிக்கக் கூடாது என்ற’ என்ற போக்கு தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
அரசமைப்பின் உச்சபட்ச அதிகாரம் படைத்த. குடியரசுத்தலைவா, தனி மனிதர் அல்ல; அவர் இந்த நாட்டுக்கே பிரதிநிதியாக இருக்கிறாா். உண்மையில் இந்த தேசம் யாருடைய சட்டைப் பைக்குள்ளும் இல்லை. மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைவது தாமதமாவதற்கு சிவசேனா மீது குற்றம் சுமத்தக் கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.