அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த கேசிஆர்! தெலுங்கானாவில் 5,100 வழித்தடங்கள் இனி தனியார் கையில்!

Must read

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 5,100 பேருந்து வழித்தடங்களை தனியாருக்கு வழங்கி, போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறார் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.

தெலுங்கானாவில், அரசு பேருந்து கழக ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், போக்குவரத்து கழகத்தை அரசு ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகளை அவர் முன்வைத்து களம் இறங்கி உள்ளனர்.

இந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 48,000க்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை கோரிக்கைகளை ஏற்காத முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அனைவரையும் வரும் 5ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.

இந் நிலையில் ஹைதராபாதில் , சந்திரசேகர் ராவ் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் குதித்துள்ள போக்குவரத்து ஊழியர்களை கோரிக்கைகளை ஏற்பது சாத்தியமில்லாத ஒன்று.

மாநிலத்தில் மொத்தம் 10,400 பேருந்து வழித்தடங்கள் இருக்கின்றன. அவற்றில், 5,100 வழித்தடங்கள் தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள், தங்களது வேலையை காப்பாற்றி கொள்ள நான் வாய்ப்பு அளிக்கிறேன்.

அவர்கள் வரும் 5ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால், பாக்கியுள்ள 5,000 வழித்தடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். போக்கு வரத்து கழகம் அரசுடன் இணைக்கப்பட மாட்டாது. அதற்கான தீர்மானம், அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்களுக்கு, கடந்த 4 ஆண்டுகளில் 67 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர்களின் கோரிக்கை நியாயமற்றது.

தனியார்மயம் ஆகிவிட்ட போதிலும், பேருந்து கட்டணம் உள்ளிட்ட இன்ன பிரச்னைகள் பற்றி ஆராய ஒழுங்கு ஆணையம் ஒன்று அமைக்கப்படும். மத்திய பிரதேசம், அரியானா, மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெற்றது போல, இந்த விவகாரத்தில் தெலுங்கானா அரசும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

More articles

Latest article