பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும்!:  சிவசேனா

Must read

மும்பை:

பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் என்று சிவசேனா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவீண் தொகாடியா கடந்த 2015ம் ஆண்டில் ராஜஸ்தானில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து  ராஜஸ்தான்  காவல்துறையினர்,  கடந்த 15-ம் தேதி குஜராத்தல் உள்ள தொகாடியாவின்  வீட்டிற்கு சென்றனர்.  ஆனால் முன்னதாகவே தகவல் தெரிந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.

மறுநாள் காலையில் மருத்துவமனை ஒன்றில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

நினைவு திரும்பிய அவர், , “இந்துக்களுக்காக நான் குரல் எழுப்பி வருகின்றேன். ராமர் கோவில், பசுவதைக்கு தடை விதித்து சட்டம் ஏற்றுதல், காஷ்மீர் இந்துக்கள் பிரச்சனையை உடனடியாக சரிசெய்தல், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை ஆகிய விவகாரங்களில் என்னுடைய குரலை எழுப்பி வருகின்றேன். ஆனால் என்னுடைய குரலை ஒடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

பழைய வழக்குகள் மீண்டும் கையில் எடுத்து என்னை கைது செய்து முடக்கப்பார்க்கிறார்கள்” என்று பேசினார்.

மேலும்,  “என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டினார்கள். சரியான நேரத்தில் அவர்கள் யார் என்பதையும் தெரிவிப்பேன்” என கூறிஉள்ளார் பிரவீன் தொகாடியா.

இந்த நிலையில் பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா இதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

“மத்தியில் பா.ஜனதா தலைமையிலான (மோடி) அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அத்வானி உள்பட ஏராளமானவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது.

பிரவீன் தொகாடியா போன்ற இந்துத்வா ஆதரவு தலைவர்களுக்கு உயிர் பயம் ஏற்படும்போது, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். ஏனெனில், பிரதமர் மோடி மீது கூட கடுமையான குற்றச்சாட்டுகளை பிரவீன் தொகாடியா முன்வைத்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு 4 மூத்த நீதிபதிகள் நீதித்துறையில் மத்திய அரசின் குறுக்கீடு இருப்பதாக குற்றம்சாட்டியபோது, அவர்களை தேசவிரோதிகள் என்றும், காங்கிரசின் ஏஜெண்டுகள் என்றும் வர்ணித்தீர்கள். இப்போது, பிரவீன் தொகாடியாவுக்கு என்ன பட்டம் கொடுக்க போகிறீர்கள்?

இந்துத்வாவின் சின்னமாக விளங்கும் வீர சவார்க்கர், பால் தாக்கரே ஆகியோர் ஒருபோதும் கழிவிரக்கத்துடன் பேசியதில்லை. கண்ணீர் சிந்தியதும் இல்லை. ஆனால், பிரவீன் தொகாடியா கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். காவல்துறையினர் என்ற போர்வையில், கொலையாளிகள் அவரை நெருங்க முய்ற்சிக்கிறார்களா? எங்களை பொறுத்தமட்டில் இந்துத்வா என்பது விளையாட்டோ அல்லது அரசியல் புரிவதற்கான களமோ அல்ல, தேசிய கடமை” என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article