பனாஜி:

கூட்டணி ஆட்சியை நடத்துவது சிரமமாக இருப்பதால் கோவா சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என்று பாஜக மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான பிரான்சிஸ் டி சோவுழா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறுகையில், ‘‘கோவா மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் வரும் என்று தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் இதை தவிர்க்க இயலாது என்றே தோன்றுகிறது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் கோவா சட்டமன்ற தேர்தலுக்கும் நடக்கும் என்று துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு ஏற்கனவே எங்களிடம் கூறியுள்ளார்.

கூட்டணி ஆட்சியை நீண்ட நாட்கள் நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. அதிகப்படியான அழுத்தங்களும், நிர்பந்தகளும் ஏற்படுகிறது. சமரசங்களும், ஒத்துபோவுதலும் நிறைய கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதனால் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது தான் சிறந்தது’’ என்றார்.

கோவா முன்னணி கட்சியை, கடந்த காலங்களில் பாஜக புறக்கணித்தது என்று மார்கோவில் நடந்த கருத்து கணிப்பு நினைவு தின பேரணியில் அக்கட்சியின் தலைவர்கள் விஜய் சர்தேசி மற்றும் ஜெயேஷ் சல்கனே £ன்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும், அவர்கள் பேசுகையில், ‘‘கோவாவின் தனித்துவ விஷயங்களில் சமரசம் செய்து கொண்டால் தற்போதைய ஆட்சியை வீழ்த்த தயங்கமாட்டோம்’’ என்றனர். இதன் பின்னர் தான் பாஜக அமைச்சர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார். இரு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ள இத்தகைய பேச்சு கோவா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இது குறித்து சர்தேசாய் கூறுகையில், ‘‘பேரணியில் பேசியதை அரசியல் ரீதியாக தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. நான் பேசியதை அரசியல் ரீதியாக தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பு கிடையாது. நான் எனது கருத்தில் தற்போதும் தெளிவாக இருக்கிறேன். கோவாவின் தனித்துவ அடையாளங்ககள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டமன்ற வளாகத்தில் டாக்டர் ஜாக் செக்குயிரியாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். நான் முன்கூட்டியே தேர்தல் வர வேண்டும் என்று கேட்கவில்லை’’ என்றார்.

மற்றொரு கூட்டணி கட்சியின் தலைவர் மகாரஷ்டிராவதி கோமாதக் கட்சி தலைவரும், அமைச்சருமான சுதின் தாவாலிகர் கூறுகையில், ‘‘செக்குயிரியா மட்டுமல்ல மேலும் பல தலைர்கள் கோவாவின் தனித்துவத்துக்காக போராடியுள்ளனர். அதனால் சிலை என்பது அவசியம் இல்லை’’ என்றார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி பதவி ஏற்றது. இதில் கோவா முன்னணி கட்சி, மகாரஷ்டிராவதி கோமாதக் கட்சி மற்றும் 3 சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.