மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புகர்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் நாளை முதல் (19ந்தேதி) காலவரையின்றி மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சமீபத்தில் சாய்பாபாவின் பிறந்த இடம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து, ஷீரடியிலுள்ள சாயிபாபா கோவிலை காலவரையறையின்றி மூடுவதென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சாய்பாபா கோவில்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில்,சாய்பாபாவை கும்பிடும் பக்தர்களும் அதிகரித்து வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ஷீரடி என்ற இடத்தில் சாய்பாபாவுக்கு மிகப்பெரிய கோயில் இருக்கிறது. சாய்பாபா பிறந்த இடம் குறித்து உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், ஷீரடியில் சாய்பாபா அதிக நாட்கள் வாழ்ந்தார் என்ற நம்பிக்கையில் அங்கு மிகப்பெரிய கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாய்பாபா ஆசிகள் பெற்று வருகின்றனர். அங்கு சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களின் வசதிக்காக மத்தியஅரசு விமான நிலையத்தையும் அமைத்துள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பத்ரி என்று தெரிவித்திருந்தார். மேலும், அங்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறினார்.
முதல்வரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சாய்பாபா பிறந்த இடம் கேள்விக்குறியாக்கப்பட்டு, சர்ச்சைகள் தொர்ந்து வரும் நிலையில், ஜனவரி 19-ம் தேதி (நாளை) முதல் சாய்பாபா கோயில் மூடப்படும் என்று கோயில் நிர்வாகமான சாயிபாபா சன்ஸ்தான் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
மேலும், முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஷீரடியில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுகப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கிராம மக்கள் ஒன்று கூடி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் இதனால் ஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் துரானி அப்துல்லா கான், ‘பத்ரியில்தான் சாயிபாபா பிறந்தாா் என்பதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. ஷீரடியைப் போன்று பத்ரியும் முக்கியமான இடமாகும். பத்ரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் அவதியுற்று வருகின்றனா் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அகமதுநகா் பாஜக எம்.பி. சுஜய் விகே பாட்டீல், ‘மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமை யிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகே சாயிபாபா பிறந்த இடம் தொடா்பான விவகாரம் முன்னெடுக்கப்படுகிறது. சாயிபாபாவின் பிறந்த இடம் எது என்பதை எந்தவோர் அரசியல் தலைவரும் தீா்மானிக்க முடியாது. அரசியல் தலையீடு தொடா்ந்தால் ஷீரடி மக்கள் இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் எதிா்கொள்வாா்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சர்சைகளுக்கு இடையே கோவிலை காலவரையின்றி மூட நிர்வாகம் முடிவு எடுத்து அறிவித்து உள்ளது. இது சாய் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.