தமிழகத்தை நிர்வகிக்கப்போகிறாரா ஷீலா பாலகிருஷ்ணன்? இவரைப் பற்றி ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட்!

Must read

தமிழக  கவர்னரை நேற்று தலைமைச்செயலாளரும் முக்கிய அமைச்சர்களான ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்  சந்தித்து பெரும் பரபரப்பை கிளப்பியது.  இந்த இரு அமைச்சர்களுக்கும் முக்கிய பொறுப்பு அளிக்கப்போகிறார்கள் என்ற யூகத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட இருப்பதாக உலவும் செய்தியை பதிவு செய்திருக்கிறது “ஸ்கோரல்” (scroll.in) செய்தி இணையதளம். அந்த கட்டுரை இங்கே.
மிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை  அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. அதேநேரம் செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடன் சுவாசிக்கும் ஜெயலலிதா, நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்கிறது. அதாவது  ஆட்சியையோ, கட்சியையோ நிர்வகிககும் நிலையில் அவர் இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.
அதிமுக, ஆட்சியைப் பொறுத்தவரை அதன் செயல்பாடுகள் அல்லது செயல்பாடின்மை எல்லாவற்றையும் ஜெயலலிதாவே முடிவெடுப்பார். அவர்தான் எல்லாமே. அதே போல கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தன் விரலசைவில் வைத்திருப்பது அவரது பாணி.

ஜெயலலிதா - ஷீலா பாலகிருஷ்ணன்
ஜெயலலிதா – ஷீலா பாலகிருஷ்ணன்

இரண்டாம் கட்ட ஆட்களும் அதற்கு பழகிப்போய்விட்டார்கள்.  அரசியல் ரீதியாகவோ நிர்வாக ரீதியாகவோ சுயமாக முடிவெடுப்பவர்களாக அவர்கள் இல்லை.
தங்கள் அரசியல் வாழ்விலும் அரசுப் பணியில்  ஏற்படும் எந்தவித சிக்கலாக இருந்தாலும்,  ஜெயலலிதாவின் பார்வைக்குச் செல்லாமல் தீர்வுகாண அதிமுக-வினருக்குத் தெரியாது.
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பிறகு,  காவிரி விவகாரம் பெரும் சிக்கலில் இருக்கிறது. ஆனால்  அதிமுக தரப்பு அதிகாரப்பூர்வமாக இதுபற்றி எதுவும் பேசவில்லை. காரணம், ஜெயலலிதாவுக்கு மாற்று யார் என்ற முக்கியமான கேள்வி எழுந்து நிற்கிறது.
இந்தக் கேள்விக்குப் பதிலாக எல்லாருடைய கண்களும் நோக்குவது…  ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணனின் பக்கம்தான்.
அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என அனைவருமே, அவரை சரியான சாய்ஸ் என்கிறார்கள். அவர்கள், ஷீலாவை ஜெயலலிதாவின் செவிப்புலன் என்கிறார்கள். அவர்தான் அரசு நிர்வாகத்துக்குப் பொறுப்பானவர் என நம்புகிறார்கள்.
ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் ஷீலா பற்றி கூறும்போது, “1976ஆம் ஆண்டில் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியராக ஷீலா பொறுப்பேற்றபோது அவருககு வயது 22. அப்படியானால் அவர் தனது முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்.  தேர்வில் வெற்றி கண்டிருக்க வேண்டும். அதுவே அவரது அறிவுக்கூர்மைக்குச் சான்று” என்று என்கிறார்.
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிடியிலேயோ அல்லது அவர்களின் கைப்பாவையாகவோ இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஆட்சி மாறும்போது முந்தைய ஆட்சியில் இருந்த முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள்  ஓரங்கட்டப்படுவார்கள். ஆனால் ஷீலாவின் நிலை வேறு. 1983இல் அப்போதைய தமிழக முதல்வரான எம்.ஜி.ஆரால் சமூக நலத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், 2000இல் திமுக ஆட்சியிலும் சமூக நலத்துறை செயலாளர் பதவியை வகித்தார்.
ஆனால், அரசியல்ரீதியாக பலவித மாற்றம் அவரிடையே  2002லேயே நிகழ்ந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றபோது அரசு தரப்பில் நம்பத்தகுந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. அதில், கட்சி சார்புடைய முத்திரையும் பதியவே செய்யும்.
ஆகவேதான்  2006இல் திமுக ஆட்சி வந்தபோது, முக்கியத்துவம் இல்லாத கல்வி நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியாக்கப்பட்டார்.
மீண்டும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் 2012ஆம் ஆண்டு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவி காலியானது. ஷீலாவின் கணவரும் அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பாலகிருஷ்ணன் அந்தப் பதவிக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அவரது மனைவியான ஷீலாவே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014, மார்ச் மாதம் ஷீலா ஓய்வு பெற்றார். ஆனாலும் அவரை  அரசு ஆலோசகராக நியமித்தார் ஜெயலலிதா. தற்போதுவரை  தொடர்ந்து அந்தப் பதவியையே வகித்தும் வருகிறார்.
உயரதிகாரி ஒருவர் ஷீலா பற்றி, “ “அவர், முதலமைச்சருக்கு ஆலோசனை கூறுவாரே தவிர, அரசுத் தரப்பை மீறி முடிவெடுக்கமாட்டார். அவரது சக பணியாளர்களே அவரது ஆங்கில புலமையைக்கண்டு வியப்பார்கள்.  கோப்புகளுக்கான ஆவணங்களை ஆங்கிலத்தில் இவரே தட்டச்சு செய்து ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்புவார். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் எந்த முடிவையும் ஷீலா எடுத்ததே இல்லை” என்கிறார்.
ஜெயலலிதாவின் ஆட்சி முறைக்கு அவ்வளவு இயல்பாகப் பொருந்திப் போனவர் இவர். அதனால்தான் நினைத்தபோதெல்லாம் அதிகாரிகளை மாற்றும் ஜெயலலிதா இவருக்கு மட்டும் நிரந்தர இருக்கை கொடுத்து தனது அருகிலேயே கொடுத்து வைத்திருந்தார்.
ஷீலா பாலகிருஷ்ணனின் அதிகாரம் நிர்வாக அமைப்பிலும் பொது வெளியிலும் வெளிப்படையாக பேசப்படாமலேயே இருந்தது. ஆனால், அவரது ஆலோசகர் பதவி என்பது தலைமைச் செயலாளர் பதவிக்கும் மேலானதாக உருவகப்படுத்தப்பட்டது சர்ச்சைக்குள்ளானது.
2014இல் ஷீலா ஆலோசகராகப் பதவி ஏற்றது முதல் இன்றுவரை  மூன்று தலைமைச் செயலாளர்கள் இருந்துள்ளனர்.
‘ஒரு ஜனநாயக ஆட்சி நிகழ இதுபோன்ற கட்டமைப்புகளை விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாக்க வேண்டும்’ என்றார், இதுகுறித்துப் பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம்.
இவ்வாறு ஸ்க்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
(ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராக சாட்சி சொன்னார் ஷீலா. இது அ.தி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அது தனிச் செய்தியாக.)
நன்றி: scroll.in

More articles

Latest article