டோஹா: தாய்மையடைந்த 32 வயது பெண்ணான ஜமைக்காவின் ஷெல்லி ஆன் ஃப்ரேஸர் பிரைஸ், உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த வயதில், அதுவும் குழந்தைப் பெற்ற பிறகு, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்லும் முதல் பெண் இவர்தான். இவர் ஒலிம்பிக்கில் 2 முறைகளும், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 முறையும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ ஓட்டத்தில் தங்கமும், 2009, 2013, 2015 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 மீ ஓட்டத்தில் தங்கங்களும் பெற்றவர். 4 ஆண்டுகள் இடைவெளிவிட்டு, குழந்தைப்பெற்ற பிறகு போட்டியில் கலந்துகொண்டவர் வெல்வார் என்று பெரும்பான்மையோர் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் வென்றார் இவர். இந்தப் போட்டியில் இவர் 100 மீட்டர்களைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 10.71 விநாடிகள்.
இவரது வெற்றிக் கொண்டாட்டத்தில் இவரின் 2 வயது மகனும் கலந்துகொண்டது மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இந்த வெற்றியை தாய்மைக்கான வெற்றியாக அறிவித்துள்ளார் அவர்!