பாட்னா:
பாரதியஜனதா கட்சியில் அத்வானி போன்ற மூத்த தலைவர்களுக்கு எந்தவித மரியாதையும் இல்லை, அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்று பாஜக எம்.பி.யான நடிகர் சத்ருகன் சின்ஹா குற்றம் சாட்டி உள்ளார்.
பிரதமராக மோடி தேர்வானதும், பாஜக தலைவராக அமித்ஷா பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து கட்சியில் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா தொகுதி பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்கா, கட்சித்தலைமைக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சத்ருகன் சின்ஹா, பாரதியஜனதாவில் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்றோர்கள் ஓரங்கப்பட்டு வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், பல தலைவர்களை உருவாக்கி கட்சியைப் பலப்படுத்திய அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்ற மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது வேதனையானது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அடுத்து வர உள்ள மக்களவைத் தேர்தலில், தான் வேறொரு கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகவும் சத்ருகன் சின்ஹா தெரிவித்தார்.
அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் ஏற்கனவே, அவர் அளித்த பேட்டி ஒன்றில், 2 எம்பிக்கள் மட்டுமே இருந்த பா.ஜ.க.வை 200 எம்பிக்கள் உடைய கட்சியாக மாற்றியவர் அத்வானிதான் என்று குறிப்பிட்டார். மேலும், அத்வானிக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் பதவியை வழங்காதது மட்டுமல்ல, பத்மஸ்ரீ விருது கூட அவருக்கு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில, திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க. பதவி ஏற்பு விழாவின்போது, பிரதமர் மோடிக்கு, விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்தினார். ஆனால், அவரை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, அவருக்கு பதில் வணக்கமும் செலுத்தாமல் தவிர்த்தார். இதை சற்றும் எதிர்பாராத அத்வானியின் முகம் வாடிப்போனது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சத்ருகன் சின்ஹாவின் தற்போதைய பேட்டி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.