டில்லி
சுனந்தா புஷ்கர் மரணத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டில்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தில் விசாரணை நடந்தது.
அந்த வழக்கில் இன்று சசிதரூர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இரு பதிவுகளாக விளக்கம் அளித்துள்ளார்.
முதல் பதிவில், “நான் இந்த குற்றப்பத்திரிகை குறித்து அனைத்து விவரங்களையும் கவனித்து வருகிறேன். அதை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளேன். சுனந்தாவை நன்கு அறிந்தவர்கள் அவர் தற்கொலை செய்துக் கொள்வார் என்பதை நம்ப மாட்டார்கள். அப்படி இருக்க நான் தற்கொலைக்கு தூண்டியதாக சொல்லப்பட்டுள்ளது. அதுவும் நான்கு வருட விசாரணைக்குப் பின்” என பதிந்துள்ளார்.
இரண்டாவது பதிவில், “டில்லி காவல்துறை எந்த முறையில் கொலைக்கான காரணத்தை கண்டு பிடித்தனர் என எதுவும் தெரியப்படுத்தவில்லை. கடந்த 2017ஆம் வருடம் அக்டோபர் மாதம் சட்டத்துறை அதிகாரி டில்லி உயர்நீதிமன்றத்தில் யாருக்கும் எதிராக எதுவும் கண்டுபிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் 6 மாதத்தில் நான் தர்கொலைக்கு தூண்டியதாக முடிவுக்கு வந்தது நம்ப முடியாததாக உள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.