டில்லி

ர்நாடக மாநிலத்தில் கால்நடை ஏலம் சிறப்பாக நடந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சி அரசுக்கான ஆதரவை 2 சுயேச்சைகள் விலக்கிக் கொண்டனர். அத்துடன் காங்கிரஸ் மற்றும் மஜத உறுப்பினர்கள் 16 பேர் ராஜினாமா செய்ததால் அரசு பெரும்பான்மை இழந்தது. முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியதன் பேரில் நடந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 பேரும் எதிராக 105 பேரும் வாக்களித்தனர்.

இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. அடுத்து பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கூட்டணி அரசைக் கவிழ்த்து விட்டு பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான சசி தரூர் தனது டிவிட்டரில் “பாஜக தடை செய்யப்பட்டுள்ள கால்நடை ஏலத்தை கர்நாடகாவில் சிறப்பாக நடத்தி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநில அமைச்சர் சிவகுமார் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் தன்னம்பிக்கை என்னை ஈர்த்துள்ளது.

இவர்கள் எந்த ஒரு குதிரை பேரத்துக்கும் இடம் கொடுக்காமல் தங்கள் அணியில் இருந்து மாறாமல் உறுதியுடன் இருந்துள்ளனர். போனவர்கள் போகட்டும். ஒரு நாள் நாமும் இதைக் கடந்து போவோம்” எனப் பதிவிட்டு பாஜகவையும் அதிருப்தி உறுப்பினர்களையும் கடுமையாகத் தாக்கி உள்ளார்.