போபால்
போபாலில் உள்ள நவாப் மாளிகையை அத்து மீறி ஆக்ரமித்ததாகவும், அங்குள்ள பழம் பொருட்களை திருடியதாகவும் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகுர் இருவர் மேல் புகார் அளித்துள்ளார்.

பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகுர். இவர் ஆராதனா உட்பட பல இந்திப்படங்களில் நடித்து அந்தக் காலத்து கனவுக்கன்னியாக விளங்கியவர். இவரது கணவர் மறைந்த கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடி. இவர் மகன் சைஃப் அலி கான் இந்தித் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர். பட்டோடி போபாலின் கடைசி நவாபான ஹமிதுல்லா கானின் பேரன் ஆவார்.

இந்த போபால் நவாபுக்கு சொந்தமான சொத்துக்களில் ஒன்று. டார் – உஸ்- சலாம் என்னும் மாளிகை ஆகும். இது போபால் அரசவையில் நீதிபதியாக பணியாற்றிய சலாமுதின் கான் என்பவர் வசித்து வந்த இல்லமாகும். தற்போது நீதிபதி சலாமுதினின் பேத்தி மஹிரா சலாமுத்னின் கணவரான ஆஸாம் கான் என்பவரும் நவாப் ராஸா என்பவரும் வசித்து வருகின்றனர். ஆஸாம் கான் தனது மனைவி மஹிராவின் மறைவுக்குப் பின் நவாப் தனது நீதிபதிக்கு பரிசாக அளித்த மாளிகை என ஒரு பத்திரத்தை காட்டி, தனது பெயருக்கு அந்த மாளிகையை மாற்றிக் கொண்டு விட்டார்.
இந்நிலையில் தங்களின் பூர்வீக சொத்தை அபகரித்து இவர்கள் வசித்து வருவதாகவும், அந்தக் கட்டிடத்தில் உள்ள பல விலையுயர்ந்த புராதன பொருட்களை இருவரும் கவர்ந்து விட்டதாகவும் ஷர்மிளா தாகுர் மாவட்ட தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அவர்கள் அந்த இடத்துக்கான பத்திரங்களை போலியாகத் தயாரித்துள்ளதாகவும், அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்படவேண்டும் எனவும் தன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி கேட்டபோது, “எனக்கு இதுபற்றி தகவல் ஏதும் இல்லை. இதைப் பற்றி நான் பேசவும் விரும்பவில்லை” எனக் கூறி உள்ளார்.