சென்னை: சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு சுறாமீன் துடுப்புகளை கடத்த முயன்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் சுங்க துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. குடியுரிமை சோதனையை முடித்துக கொண்டு சிங்கப்பூர் விமானத்தில் செல்ல அவர் தயாராக இருந்தார்.
அவர் கையில் வைத்திருந்த அட்டை பெட்டி மீது சந்தேகம் கொண்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுறா மீன் துடுப்புகளை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பெயர் தர்பார் லத்தீப் என்பதும் திருச்சியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மொத்தம் 14 கிலோ சுறா மீன் துடுப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பட்டியலில் சுறா மீன் துடுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், வெளிநாடுகளில் உள்ள உயர்ரக உணவகங்களில் சுறா மீன் துடுப்பு சூப்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த மருந்து என்று நம்பப்படுவதே அதற்கு காரணமாகும்.