நியூயார்க்
அமெரிக்க விமான நிறுவனமான போயிங் 737 ரக விமான விபத்தை ஒட்டி பங்குகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
உலகில் உள்ள பல விமான சேவை நிறுவனங்கள் போயிங் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. பிரஞ்சு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ320நியோ ரக விமான விற்பனை அதிகரித்ததை தொடர்ந்து போயிங் 737 ரக விமானங்கள் உற்பத்தி தொடங்கியது. அப்போது இந்த விமான நிறுவன பங்குகள் விலை $75 டாலராக இருந்தது உடனடியாக இருமடங்கு உயர்ந்தது.
உலகின் அதிக விமானப் பயணிகள் உள்ள நாடான சீனா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என அனைத்து விமான சேவை நிறுவனங்களும் போயிங் 737 ரக விமானத்தை கொள்முதல் செய்ய தொடங்கின. அதை ஒட்டி நிறுவன பங்குகளின் விலை மேலும் உயர்ந்தது.
ஆனால் கடந்த 5 மாதங்களுக்குள் போயிங் 737 மாக்ஸ் ரக விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் அனைவரும் மரணம் அடைந்தனர். அதை ஒட்டி பல நாடுகளின் விமான சேவை நிறுவனங்கள் போயிங் விமானத்துக்கு இடைக்கால தடை விதித்தது. போயிங் விமான நிறுவன பங்குகள் விலை சரிய தொடங்கியது.
அத்துடன் விமான பாதுகாப்பு மென்பொருள் தனியாக விற்கப்படுவதாகவும் அதை பொருத்தாததால் விபத்துக்கள் ஏற்பட்டதாக வந்த தகவலை ஒட்டி சீனா தனது கொள்முதல் ஆர்டரை ஏர்பஸ் நிறுவனத்துக்கு மாற்றி உள்ளது. தற்போது போயிங் விமான பங்குகளில் விலையில் 13% மேல் சரிவு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி விபத்துக்குள்ளான விமான சேவை நிறுவனங்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடரலாம் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு வழக்கு தொடர்ந்தால் கோடிக்கணக்கில் இழப்பிடு அளிக்க வேண்டி வரும். போயிங் விமான நிறுவனத்தில் சுமார் 2.3 லட்சம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
அதைத் தவிர ஏராளமான நிறுவனங்கள் இந்த விமானத்தின் உறுதி பாகங்களை செய்து வருகின்றன. அதனால் இந்த நிறுவனத்தை நம்பி சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் உதிரிபாகம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரது வாழ்வாதாரத்தையும் கவனிக்கும் பொறுப்பும் போயிங் விமான நிறுவனத்துக்கு உள்ளது.
இது குறித்து பொருளாதார நிபுணர்கள், “போயிங் நிறுவனம் முதலில் ஆட்டோமொபைல் சாதனங்களை உற்பத்தி செய்து வந்தது. அப்போதிருந்தே இந்த நிறுவனம் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வருகிறது. ஆகவே இந்த நிலை விரைவில் மாற தேவையான நடவடிக்கைகளை எடுத்து இந்த வீழ்ச்சியில் இருந்து போயிங் விரைவில் மீண்டு வரும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.