புனே: காஸ்மாஸ் வங்கியில் நடைபெற்ற ஆன்லைன் திருட்டு சம்பவத்தில், வடகொரியாவிற்கு நேரடி தொடர்பிருப்பதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் குழுவின் அறிக்கை கூறுகிறது.

ஆன்லைன் திருட்டு சம்பவத்தில் வடகொரியாவை தொடர்புப்படுத்தி, ஒரு ஏஜென்சி அளிக்கும் முதல் அறிக்கை இதுவாகும். பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

வடகொரியாவின் ஹேக்கர் கும்பலான ‘லசாரஸ்’ இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியே செய்திகள் வந்தன. இந்த ஆன்லைன் திருட்டு சம்பவத்தில், தொடர்ந்து 2 நாட்களாக ஒரேசமயத்தில் பணமெடுப்பு நிகழ்ந்தது.

இதன்மூலம், வங்கிக்கு ரூ.94.42 கோடி இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆன்லைன் தாக்குதல் மிகவும் நவீனமான முறையில் நடத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

– மதுரை மாயாண்டி