மும்பை
மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெறும் என சரத்பவார் உறுதி அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க விரும்பும் சிவசேனா கட்சியானது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதையொட்டி அக்கட்சி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது. தேசியவாத காங்கிரஸுடன் பாஜக பேசி வருவதாகவும் இதனால் இந்த கூட்டணி ஆட்சி அமைத்தால் விரைவில் கவிழும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், “தற்போது ஜனாதிபதி ஆட்சியில் உள்ள மகாராஷ்டிராவுக்குத் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து நிலையான ஆட்சியை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆட்சி ஐந்து வருடங்களுக்குத் தொடரும் என்பதால் இடைத் தேர்தல் வர வாய்ப்பே இல்லை.
பாஜக எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவந்த செய்திகள் தவறானவை. நாங்கள் சிவசேனா கட்சியுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறெந்த கட்சியும் இடம் பெறவில்லை.
இம்மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்கி உள்ளனர். இந்த சந்திப்பில் நான் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் சிவசேனாவின் இந்துத்வா ஆதரவு குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் என்றுமே மதச்சார்பற்ற நிலையில் இருக்கும் நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரிகள் இல்லை. “ எனத் தெரிவித்துள்ளார்..