நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திற்கு சொந்தமான, சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு, ‘மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்’ கட்டப்பட இருக்கிறது.
இதனால், நேற்றுடன் தியேட்டர் மூடப்பட்டது.
கடந்த, 1961ம் ஆண்டு கட்டப்பட்ட, சாந்தி திரையரங்கை அப்போதைய தமிழக
முதல்வர் காமராஜர் திறந்து வைதார். இதில் சிவாஜி கணேசன் நடித்த,
‘பாவமன்னிப்பு’ திரைப்படம் முதன் முதலாக திரையிடப்பட்டது.
சிவாஜி கணேசனும், ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதியும் சேர்ந்து கட்டிய இந்த திரையரங்கின் முழு உரிமையாளராக 1962ல் சிவாஜிகணேசன் ஆனார்.
இதன் பிறகு, சிவாஜிகணேசன் படங்கள் மட்டுமே இங்கு திரையிடப்பட்டு வந்தன. சிவாஜி கணேசனின் மூத்த மகள் பெயர் சாந்தியின் பெயரே, திரையரங்குக்கும் வைக்கப்பட்டது.
திருவிளையாடல், வசந்தமாளிகை, திரிசூலம், முதல் மரியாதை உள்ளிட்ட பல திரைப்படங்கள், இங்கு 25 வாரங்கள் வரை ஓடி சாதனை படைத்தன. ‘திரிசூலம்’ படம், ஓராண்டுக்கு மேலாக ஓடியது.
ரஜினிகாந்த் நடித்த, ‘சந்திரமுகி’ படம், 888 நாட்கள் ஓடியதும் குறிப்பிடத்தக்கது.
2006ம் வருடம் இந்த திரையரங்கம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ‘சாய் சாந்தி’ திரையரங்கம் துவங்கப்பட்டது.
சிவாஜிணேசன் மகன் பிரபு நடிக்க வந்த பிறகு, அவரது படங்களும் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டன. பிறகு பிரபுவின் மகன் விக்ரம்பிரபு நடித்த படங்கள் உட்பட, பிற நடிகர்கள் படங்களும், திரையிடப்பட்டு வந்தன.
55 ஆண்டுகள் பாரம்பரிய பெருமைமிக்க சாந்தி திரையரங்கம் ‘மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்’ கட்டப்படுவதற்காக இடிக்கப்பட இருக்கிறது. நேற்றுடன் சாந்தி திரையரங்கம் மூடப்பட்டது.
“’சாந்தி, சாய் சாந்தி’ திரையரங்குகள் புதுப்பிக்கப்பட உள்ளதால், நேற்று முதல், மூடப்படுகிறது” என்று நிர்வாகத்தின் திரையரங்க வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
சிவாஜி கணேசன் குடும்பத்தினரும், அக் ஷயா குரூப் நிறுவனமும் இணைந்து புதிய மல்ட்சி காம்ப்ளக்ஸை உருவாக்க இருக்கின்றன. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிவாஜி கணேசன் மகனும் நடிகருமான பிரபு, “திரையரங்கை இடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்தானே. ஆகவே, இந்த இடத்தில், ‘மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்’ கட்ட, கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதை ‘அக் ஷயா குரூப்’ நிறுவனத்துடன் இணைந்து செய்கிறோம். இங்கு உருவாகும் வளாகத்தில் ஏற்படுத்தப்படும் திரையரங்கங்களுக்கு ‘சாந்தி’ என்றே பெயர் வைக்கப்படும்” என்றார்.