(சங்கர்) கணேஷ்… குண்டு வெடிப்பு…   விரல்கள் துண்டிப்பு: அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக்

“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…”

“காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டுவைத்து…”

“ரெண்டு கண்ணம் சந்தன கிண்ணம்..”

–  இன்றும் மனதை மயக்கும் திரைப்பாடல்களில் இவையும் உண்டு. இது போல ரசிக்கத்தக்க பல பாடல்களுக்கு இசை அமைத்தது சங்கர் – கணேஷ்  இசை ஜோடி.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று 1000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்தது வெற்றிகரமாக வலம் வந்தது இந்த ஜோடி.

சங்கர் – கணேஷ்

இந்த நிலையில் 1986ம் ஆண்டு..தீபாவளிக்கு முந்தைய நாள், அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.

இசை ஜோடியில் இளையவரான கணேஷூக்கு பார்சல் ஒன்று வந்தது. வீட்டுக்கு வெளியே வந்து வாங்கியவர், வீட்டுக்குள் சென்று பிரித்தார்.

உள்ளே அழகான டேப் ரிக்கார்டர் ஒன்று இருந்தது. தனது ரசிகர்களில் ஒருவர் அனுப்பியிருப்பார் என்று எண்ணியபடி, டேப் ரிக்கார்டரை ஆன் செய்தார் கணேஷ்.

அது, பெரும் சத்தத்துடன் வெடித்தது! கணேஷின் முகம், கைகளில் ஜெலட்டின் துகள்கள் புகுந்தன. வலது கண் பார்வை பாதிக்கப்பட்டதோடு, கைவிரல்களும் துண்டாகின.

சம்பவம் நடந்த மறுநாள் தீபாவளி அன்று இதுதான் தமிழ் நாளிதழ்களின் தலைப்புச் செய்தி.

(சங்கர்) கணேஷூக்கு அந்த, டேப் ரிக்கார்டர் குண்டை அனுப்பியது யார். எதற்காக அப்படிச் செய்தார் என்ற கேள்விகள் பெரிதாய் எழுந்தன.

ஏதேதோ விவகாரங்கள் என்று உறுதிப்படுத்தப்டாத செய்திகள் வெளியாகின. “ஒருவரது பாடல் மற்றும் இசையை அவருக்கு அங்கீகாரம் தராமலேயே கணேஷ் தொடர்ந்து பயன்படுத்திவிட்டாராம். இது குறித்து நியாயம் கேட்டதற்கும் தக்க பதில் தரவில்லையாம்” என்றும் சொல்லப்பட்டது. கூடவே, “சங்கர் கணேஷ் இசையில் வெளியாகி பிரபலமான நீயா படத்தின் பாடல்களும்கூட இந்தியில் இருந்து எடுக்கப்பட்டதுதான்” என்றும் அப்போது பேசப்பட்டது.

கணேஷ்

ஆனால் உறுதியான தகவல் என்று ஏதும் வெளியாகவில்லை.  கணேஷும் எதுவும் பேசவில்லை.

இந்த நிலையில்.. கிட்டதட்ட முப்பது ஆண்டுகள் கழித்து….   “வெங்காயம்” பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் முகநூல் பதிவு ஒன்று அதிர வைக்கும் சேதியைச் சொல்கிறது.

அந்த வெடிகுண்டு டேப்ரிக்கார்டரை அனுப்பியது, கவிஞர் கந்தசாமி என்பவர்தான் என்கிறது அவரது பதிவு. அதற்கான காரணத்தையும் சொல்கிறது.

சங்ககிரி ராஜ்குமார் எழுதிய அந்தப் பதிவு இதுதான்:

“கவிஞர் கந்தசாமி என்று தான் அவர் பெயரை இன்னும் சொல்கிறார்.

சங்கர் கனேசுக்கு நிறைய பாடல்களை பாடி கேசட்டில் பதிவு செய்து அனுப்புவது வழக்கம், ஒரு கட்டத்தில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் அவரது பாடல்கள் பயன் படுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைகிறார். நியாயம் கேட்க போயும் பலனில்லை.

கோபத்தில் ,டேப் ரெக்கார்டர் ஒன்றை கழட்டி அதிலுள்ள பகுதிகளை கழட்டி விட்டு ஜெலட்டின் குச்சிகளை வைத்து play பட்டனை அமுக்கினால் வெடிப்பது போல அமைத்து கடிதம் ஒன்றை இணைத்து சேலம் தலைமை அஞ்சலகம் போய் அனுப்பிவிடுகிறார்.

கவிஞர் கந்தசாமி

அடுத்த நாள் தீபாவளி. செய்தி தாளில் சங்கர்கனேஷ் வீட்டில் வெடிகுண்டு வெடித்த செய்தியை தேவூரில் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து படித்திருக்கிறார்.

ஒருவாரத்துக்குள் அவர் கையெழுத்தை வைத்து போலீஸ் மோப்பம் பிடித்து வருவார்கள் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு சங்கர்கனேஷ் நெருக்கமாக இருந்ததால் இவர் மீதான பிடி இறுகுகிறது.

அதன் பிறகு நடந்த ஆட்சிமாற்றத்திற்கு பிறகு தண்டனை குறைந்து வெளிவருகிறார். அதோடு அவர் கவிஞர் கனவு மண்ணோடு மண்ணாகி போகிறது.

நான் அவரை சந்தித்த போது எந்த அடையாளமுமில்லாமல் விவசாயம் செய்து கொண்டிருந்தார். “மாரளவு தண்ணியில” என்று ஒரு பாடலை பாடி காண்பித்த போது பிரமிப்பாக இருந்தது.இப்போதைக்கு out of Trent என்றாலும் அந்த காலத்தில் சக்கை போடு போட வேண்டிய பாடல்.
ஒரு படத்திற்கு பாடல் கம்போஸ் செய்து மலேசியா வாசுதேவன்,ஜானகி குரலில் அருமையான இது வரை யாரும் கேட்காத பாடல் இரண்டும் அவரிடம் இருக்கிறது.
“அதுக்கப்புறம் மெட்ராஸ் போனா கொன்னுபுடுவாங்கனு, நான் எழுதி வச்சிருந்த பாட்டையெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டேன்” என அவர் கலங்கிய போது கலைந்து போன கனவை காணமுடிந்தது.

எதோ ஒரு துரோகம் ,ஆற்றாமையில் ஏற்பட்ட கோபம், வரலாறு படைக்க வேண்டிய ஒரு கலைஞனை வயலில் ஆடுமேய்க்க செய்து் விட்டதே” – இதுதான் சங்ககிரி ராஜ்குமாரின் பதிவு.

இதையடுத்து நாம் (சங்கர்) கணேஷை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “பழைய விசயம்.விடுங்க” என்றார்.

“அந்த கவிஞரின் பெயரைப் போடாமல், அவரது கவிதைகளைப்

பயன்படுத்திவிட்டீர்கள் என்று கூறப்படுகிறதே” என்றோம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்… ஏதோ நடந்துவிட்டது.. கடவுள் காப்பாத்திவிட்டார். நீங்க சொன்ன ஆளு அதை (டேப்ரிக்கார்டர்) செய்யலை.. அவரு பாவம் கவிஞர்.. அவரை சொல்லக்கூடாது” என்றார்.

“அவரை தெரியுமா” என்று கேட்டதற்கு, “தெரியாது சார்..” என்ற கணேஷ், “அது பத்தி பேசறது நல்லா இருக்காது.. சரியா இருக்காது” என்றதோடு தொடர்பை துண்டித்துவிட்டார்.

முப்பத்தோறு வருடங்களுக்கு முன் நடந்த அந்த விபரீத சம்பவத்தில், பாதிக்கப்பட்ட கணேஷின் வலது கண், மூன்று வருடங்களுக்கு முன் நடந்த சிறப்பு அறுவை சிகிச்சையில் சரிப்படுத்தப்பட்டது. இப்போது தனக்கு நன்றாக பார்வை தெரிவதாக கணேஷ் அப்போது தெரிவித்தார்.

கவிஞர் கந்தசாமிதான் பாவம்… அவரது படைப்புகள், அங்கீகாரம் அளிக்கப்படாமலேயே பிறரால் பயன்படுத்தப்பட்டதற்கு  பரிகாரம் ஏதும் கிடைக்கவில்லை.   ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்.. தனது பாடல்களில் ஒன்றை முணுமுணுத்தவாறே…


English Summary
( Shankar) Ganesh ... Bomb Blast ... why ?: shockable flashback