சர்வதேச அளவிலான போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நிகழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து உடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன் முதல் நாள் போட்டி இன்று நேப்பியரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில் விளையாடிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் என்ற சாதனையை ஷமி படைத்தார். 50 ஓவர்கள் கொண்ட விளையாட்டுகளில் ஷமி பங்கேற்ற இந்த போட்டி 56வது போட்டியாகும்.
இந்த போட்டியின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்டின் கப்டிலை வீழ்த்தி ஷமி வெளியேற்றினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றார்.
ஷமியின் இந்த சாதனைக்கு முன்னதாக இர்பான் பதான் 59 ஒருநாள் போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை கைப்பற்றியது சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதனை ஷமி தகர்த்துள்ளார். இதேபோன்று ஜாகிர்கான் 65 போட்டிகளிலும், அஜித் அகர்கார் 67 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.