புதுடெல்லி:

2020-ம் ஆண்டுக்குள் 8-க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இடுப்பு மற்றும் முழங்காலில் பொருத்தப்படும் பிளேட்டுகள், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், டயாலஸிஸ் கருவி, எக்ஸ்ரே இயந்திரங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

1940-ம் ஆண்டு மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டத்தின்கிழ், இத்தகைய மருத்துவ உபகரணங்களின் விற்பனை மற்றும் தயாரிப்பை ஒழுங்குபடுத்த இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, இந்தியாவில் 80 சதவீத மருத்துவ உபகரணங்கள் விற்பனை மற்றும் தயாரிப்பு ஒழுங்குபடுத்தப்படவில்லை.

அமெரிக்காவின் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் கருவி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தர இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு  உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு மட்டுமே உள்ளது.
தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள 8 மருத்துவக் கருவிகளை அனுமதிப்பது குறித்தோ, உரிமத்தை ரத்து செய்வது குறித்தோ இந்த அமைப்புதான் இறுதி முடிவு எடுக்கும்.

2020-க்குள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தும் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என்றனர்.