சேலம்:

சேலம் கல்லூரியில் ஹாதியாவை அவரது கணவர் ஷபின் ஜகான் பல மாதங்களுக்கு பின்னர் சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதம் மாறிய ஹாதியா, பிறகு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஷபின் ஜகானை திருமணம் செய்து கொண்டார். இது ‘லவ் ஜிஹாத்’ என்று கூறி கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா-ஜஹான் திருமணத்தை செல்லாது என்று அறிவித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தை ஹாதியா நாடினார்.

திருமணத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவைத் தடைச் செய்யக் கோரி ஹாதியா உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்ட மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இடைக்கால ஏற்பாடாக ஹாதியா தனது ஹோமியோபதி படிப்பை தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் தொடர என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஹாதியா விரும்பினால் அவரது கணவரை சந்திக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது. இதையடுத்து சேலத்தில் பயின்று வரும் ஹாதியாவை அவரது கணவர் ஷபின் ஜகான் சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் ஜகான் கூறுகையில், ‘‘ எங்கள் சந்திப்பு உணர்வு பூர்மாக இருந்தது. பல விஷயங்களை ஹாதியா என்னுடன் பகிர்ந்து கொண்டார். நாங்கள் நீண்ட இடைவேளைக்கு பின்னர் சந்தித்துள்ளோம். இது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.