அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை ஷா கேரி ரிச்சர்ட்சன் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 19 ம் தேதி அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் நடந்த 100 மீட்டர் சோதனை ஓட்டத்தில் முதலாவதாக வந்து அசத்தினார் ரிச்சர்ட்சன்.

இந்த சோதனை ஓட்டத்திற்குப் பின் டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வார் என்று உலகமே இவரை ஆவலோடு எதிர்பார்த்திருந்தது.

இந்நிலையில், போட்டியின் போது இவர் மரிஜுனா போதை மருந்து எடுத்துக்கொண்டதாக பரிசோதனையில் தெரியவந்தது. இதனை ஒப்புக் கொண்ட ரிச்சர்ட்சனுக்கு தடகள போட்டிகளில் விளையாட ஒரு மாத தடை விதித்து அமெரிக்க தடகள சங்கம் அறிவித்துள்ளது.

போதை மருந்து பரிசோதனை நிரூபிக்கப்பட்டவர்கள் மூன்று மாதங்களுக்கு விளையாட முடியாது என்றாலும், இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்கான சிகிச்சை பெற முடிவெடுத்ததால் தண்டனை ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் இவருக்கான ஒரு மாத தண்டனை ஜூன் 28 முதல் விதிக்கப்பட்டிருப்பதால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இவர் பங்கேற்க முடியாது.

இந்த தடை 100 மீட்டர் போட்டி தவிர 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கும் பொருந்துமா என்பது குறித்து தடகள சங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஷா கேரி ரிச்சர்ட்சன், குறிப்பிட்ட நாளில் போட்டி நடப்பதற்கு சிலமணி நேரம் முன்பு எனது தாயார் இறந்த துயரத்தை மறக்க நான் போதை மருந்து எடுத்துக்கொண்டேன், ஆனால் ஓரிகன் மாகாணத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதால் அப்படிச் செய்தேன், எனது தவறை நான் உணர்ந்துகொண்டேன் அதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று தெரிவித்தார்.