ராஜஸ்தான்,

ராஜஸ்தானில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களை அடித்து துவைத்து பந்தாடினால் இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியா.

ராஜஸ்தானில் தனது கணவர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது,  ரெயில்வே கிராசிங் அருகே இரண்டு இளம்பெண்களை  3 இளைஞர்கள்  பாலியல் தொந்தரவு செய்ததை கண்டதும் அவர்களை பிடித்து அடித்து  உதைத்தார். அவரது அடி தாங்க முடியாமல் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் கிருஷ்ணா பூனியா. இவர் புத்தாண்டு தினத்தன்று ராஜஸ்தானில் தனது கணவர் ஊருக்கு செல்லும் வழியில் ராஜ்கார் என்ற இடத்தில் ரயில்வே கிராசிங்கில் காத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இரண்டு  இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். அந்த இளம்பெண்கள் கூச்சல் போட்டனர். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பூனியா, காரில் இருந்து இறங்கி வந்து,  பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த 3 பேரையும் அடித்து துவைத்து எடுத்தார்.

அவரது 6 அடி உயர தோற்றமும், அவரது அடியின் வேகமும்  தாக்குபிடிக்க முடியாமல் மிரண்டு போன அந்த மூன்று இளைஞர்களும் வண்டியை எடுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினர்.

ஆனால், அவர்களை விரட்டிச்சென்ற பூனியா, அவர்களில் ஒருவனின் சட்டை காலரை பிடித்து இழுத்தார். அதனால் அவன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தான்.. மற்ற இருவரும் மோட்டார் சைக்கிளுடன் தப்பி விட்டனர்.

மாடிக்கொண்ட இளைஞர் பூனியாவின் அடி தாங்காமல் அலறினார். இதை கண்ட அக்கம் பக்கத்தினரும் அந்த இளைஞரை சரமாரியாக துவைத்து எடுத்தனர்.

இதுகுறித்து அருகிலிருந்த போலீஸ் நிலையத்துக்கு பூனியா தகவல் கொடுத்தார். அவர்கள் அவனை கைது செய்து, மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள்.

இந்த செயல் அந்த பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்த பகுதி மக்கள் பூனியாவையும் பாராட்டினர்.

இதுகுறித்து பூனியா கூறியதாவது,

நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு இரண்டு முறை தகவல் கொடுத்தேன். ஆனால் அவர்கள் தாமதமாகத்தான் வந்தார்கள். இந்த நாட்டில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

பொது இடத்தில் இப்படியொரு சம்பவம் நடைபெறுவதை பார்த்த யாரும் தட்டிக் கேட்க தைரியமில்லாமல் இருப்பதுதான் வேதனை தரும் விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

32 வயதாகும் பூனியா கடந்த 11 ஆண்டுகளாக ரயில்வேயில் பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே ஆசியப் போட்டியில் இருமுறை வெண்கலப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.