டெல்லி: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். மாநில அரசுகளின் முக்கிய வருவாய் தரும் எரிபொருட்களின் மீதான வரியை இழக்க தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று லக்னோவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி குறித்து விவாதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டதால், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது. இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால், எரிபொருட்களின் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களின் எதிர்பார்ப்பில் மண்ணை போட்டுள்ளன மாநிலங்கள்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிச்சலுகையை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றவர், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர தற்போது வாய்ப்பில்லை எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், ஊடகங்களில் விவாத பொருளாக மாறியதாலும் தான் ஜிஎஸ்டி வரம்பிற்கு பெட்ரோல் டீசலை கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. பல மாநில அரசுகள் ” தங்கள் வருவாய் பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே இப்போதைக்கு பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப் படமாட்டாது” என்று தெரிவித்தார்.
மேலும், பல விலையுயர்ந்த உயிர் காக்கும் மருந்துகளுக்கு, ஜிஎஸ்டி வரி இருக்காது என்று அறிவித்தார். தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் தசைச் சிதைவுக்கு சிகிச்சையளிக்க மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வரி விலக்கு அளித்துள்ளது என்றும், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
கோவிட் -19 தொடர்பான மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி விகிதங்களின் சலுகை, டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்துக்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை இந்த விலக்கு தொடர்ந்து கிடைக்கும்.
சரக்கு வாகனங்களை இயக்குவதற்கு மாநிலங்கள் வசூலிக்கும் தேசிய அனுமதி கட்டணத்திலிருந்து ஜிஎஸ்டி கவுன்சில் விலக்கு அளித்துள்ளது.
டீசலுடன் கலக்கப்பட்ட பயோடீசலுக்கான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டு வர தமிழகஅரசும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தங்களுக்கு கிடைக்கும் சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு,
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் ஒராண்டுக்கு பின் நேரடியாக நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், தவிர்க்க முடியாத பணிகள் காரணமாக இந்த கூட்டத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் சில கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறேன்.
ஜி.எஸ்.டி., செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் கடினமாக உள்ளது. ஆங்கிலத்திலும் உள்ளது. இதை புரிந்து கொள்ள முடியாமல் சிறு, குறு வணிகர்கள், வரி ஆலோசகர்களை நாடுவதால் அவர்களுக்கு கூடுதல் செலவாகிறது. அதனால் ஜி.எஸ்.டி., நடைமுறையை இணையத்தில் முழுமையாக தமிழ்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி., அமலால் மாநிலங்களின் சிறிய அளவிலான வரி உரிமைகள் கூட பறிபோய்விட்டன.
மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது.
இதையும் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்தியஅரசு 20% வரியும், மாநில அரசுகள் 34% வரியும் விதிக்கிறது. அதுபோல, ஒரு லிட்டர் டீசலில் மத்தியஅரசு 21% வரியும் மாநில அரசுகள் 25% வரியும் விதிக்கிறது. வரிகளின் காரணமாகவே விலை அதிகரிக்கப் படுகிறது. இந்த வரிகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் அதிகபட்சமாக 18 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்படும். இதனால் சுமார் 30 சதவிகிதம் அளவுக்கு விலை குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது பெட்ரோல் விலை ரூ.70க்குள் வந்து விடும். ஆனால் வரி மூலம் வரும் வருவாயை இழக்க பெரும்பாலான மாநில அரசுகள் விரும்புவது இல்லை. இதனால்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டே போகிறது.