டெல்லி: பல மாநிலங்கள், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 முதல் 12 மணி நேரம் வர நீட்டித்துள்ளன.
கோவிட் -19 பரவுவதை தடுப்பதற்காக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், குறைக்கப்பட்ட ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகத்தின் ஏற்கனவே வெளியிட்டு உள்ளது.
இதையடுத்து, பல மாநிலங்களில் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஏற்கனவே மாற்றத்தை அறிவித்துள்ளன.
இந்நிலையில், பஞ்சாபில் உள்ள தொழிலாளர் துறையின் முதன்மை செயலாளர் விஜய் குமார் ஜான்ஜுவா, வேலை நேரம் 8 மணி முதல் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்படுகிறது, மேலும் கூடுதல் மணிநேரங்களுக்கு ஊதியம் இரட்டிப்பாகும் என்று அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அரசு, கூடுதல் வேலை நேரம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், உற்பத்தி அதிகமாகும் என்று கூறி உள்ளது. கூடுதல் வேலை நேரம், ஏற்கனவே இழந்துள்ள அத்யாவசிய பொருட்களின் முழு விநியோகத்தையும் மீட்டெடுக்க உதவும் என்று ராஜஸ்தானின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,00,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இமாச்சல பிரதேசத்தில், தொழிற்சாலைகள் கடந்த வாரத்தில் வேலை நேரத்தை நீட்டித்து அறிவித்து உள்ளன. அதே நேரத்தில், தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் பணிநீக்கம் செய்யக்கூடாது, லாக்டவுன் காலகட்டத்தில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரியானா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி உணவு, சுகாதாரம் மற்றும் தொழிலாளர்களின் உறைவிடம் ஆகியவற்றிற்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டியிருப்பதால் அதிக ஊதியங்கள் நிதி ரீதியாக இயலாது என்று பஞ்சாப் ரைஸ் மில்ஸ் சங்கத்தின் இயக்குனர் அசோக் சேத்தி கூறினார்.