சென்னை: குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் விரைவில் கைதாவர் என்றும், பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
அவரின் பேட்டியில் கூறியுள்ளளதாவது, “குழந்தைகள் சம்பந்தமான ஆபாசப் படங்களை இணையதளங்களிலோ அல்லது வேறு வகைகளிலோ பார்ப்பது சட்டப்படி குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர், அதுதொடர்பான ஆபாச வீடியோக்களை தங்களின் கணினிகள், லேப்டாப்கள் மற்றும் மொபைல் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.
இவர்களின் மீது தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு கைதுசெய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இத்தகைய ஆபாசப் படங்களைப் பார்த்தோரின் எண்ணிக்கை சென்னையில் அதிகம் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் பார்த்த ஆபாசப் படங்களின் தன்மைகளை ஆராய்ந்துள்ளோம்.
எனவே, அவர்களின் புகைப்படம், வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். மேலும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார் அவர்.