மும்பை: உலக நாடுகளை பயமுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பிறழ்வான ஓமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி சீரம் நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க இந்திய தயாரிப்புகளான பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத்தினர் கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 124 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கியுள்ள பிறழ்வு வைரசான வீரியம் மிக்க ஒமிக்ரான் பரவலை தடுக்க உலக நாடு கள் தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் இந்த வைரஸ் தாக்குவதால்,  அதை தடுக்கும் வகையில்  சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தொடங்கி உள்ளன.

இந்த கொடுந்தொற்று இன்னும் இந்தியாவில் கால் பதிக்காத நிலையில், புனேவைச் சேர்ந்த கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு மருந்து நிறுவன மான  சீரம் நிறுவனம்,  கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத் திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார்சிங்,  இந்தியாவில் இப்போது கோவிஷீல்டுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், கொரோனா வைரஸின் வளர்ந்து வரும் புதிய விகாரங்களை அடுத்து, பூஸ்டர் டோஸின் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது,  இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக   கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன், பூஸ்டர் டோஸ் தேவையா என்பது பற்றி நிபுணர் குழு ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.