டெல்லி: ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்கும் புனேவை சேர்ந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தற்போது ரஷியாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக ஒப்புதல் பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கி உள்ளது.
புனேவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனமா ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனம்’ தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருகிறது. மேலும், அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நோவாவேக்ஸ் என்ற தடுப்பூசியையும் தயாரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரிக்க அனுமதி கோரியிருந்தது. உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியாகக் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்திருந்தது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சுமார் 92% வரை நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த மத்தியஅரசும், இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பும், சீரம் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஜூன் 4-ம் தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்ரீஸ் நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது, இனிமேல் சீரம் நிறுவனமும் தயாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.