டேராடூன்:

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரகண்ட் மாநிலத்தை ஒட்டியுள்ள சீன எல்லைப்பகுதிக்கு 28-ம் தேதி செல்கிறார்.

கடந்த சில மாதங்களாக இந்தியா சீனா இடையே டோக்லாம் பிரச்னையால் பதற்றம் நிலவி வந்தது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி சீன பயணம் மேற்கொண்டார்.

கடந்த ஜூலை மாதம் சீன ராணுவத்தினர் உத்தரகண்ட் மாநிலத்திற்குள் ஊடுருவி சென்றது பெரும் பிரச்னையானது. இதனையடுத்து ராஜ்நாத் சிங் 28-ம் தேதி முதல் உத்தரகண்ட் மாநிலத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சுற்றுப்பயணத்தின் போது அவர் 12 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள ரிம்ஹிம், 10 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள மணி, 10 ஆயிரத்து 200 அடி உயரத்தில் உள்ள ஆலி ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

அங்கு இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி சீன பயணத்தை தொடர்ந்து ராஜ்நாத் சிங் எல்லைப்பகுதிக்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.