ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை ஒட்டி ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 11 பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவிலான நபர்கள் வாகனங்களில் பரமக்குடிக்கு வருகை தருவார்கள் என்பதால் சட்ட ஒழுங்கை பராமரிப்பதற்கு சவாலாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல மாணவர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய 4 வட்டங்கள், ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இது தவிர சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கும் செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை ஒட்டி சட்ட ஒழுங்கு பாதுகாப்புக்காக இன்று முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரையிலும், அக்டோபர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல வெளி மாவட்ட வாகனங்கள் அனுமதியின்றி ராமநாதபுரத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது