சென்னை: தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி தேவை என திமுக எம்எல்ஏ கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா உள்பட சில மாநிலங்களுக்கு தனிக்கொடி இருக்கும்போது, தமிழ்நாட்டுக்கும் தனிக்கொடி தேவை என கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி அவசியம்’ என மறைந்த சி.பா.ஆதித்தனர், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பலர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் திமுக எம்எல்ஏ கருணாநிதி, தனிக்கொடி என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்பான்மை எண்ணிக்கை பலத்தோடு தி.மு.க ஆட்சியமைத்தது. இதன்பிறகு `மத்திய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் `ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை கூறி வருகிறது. மத்தியஅரசுக்கு எதிரான தமிழகஅரசின் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தனக்கென ஒரு தனிக் கொடியை உருவாக்கியது. அதற்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்து இருக்கின்றது. அங்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் கன்னட கொடி ஏற்றப்படுகின்றது. அதுபோல, தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது.
இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ ஜே.கருணாநிதி, வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், கர்நாடக மாநிலத்திற்கு தனி மாநில கொடி இருக்கும்போது, தமிழ்நாட்டிற்கென ஏன் கூடாது தனிக்கொடி? 1970ல் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த தனிகொடி கோரிக்கையை மீண்டும் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி தேவை. அது நம் உரிமை என்று தெரிவித்து உள்ளார்.
“அரசியலமைப்புச் சட்டத்தில், அந்தந்த மாநிலங்கள் தனிக்கொடி அமைத்துக் கொள்ளவதற்கு எந்தத் தடையும் சொல்லப்படவில்லை என கூறப்படுகிறது. தமிழ் தேசிய இனத்தின் அடையாளத்தைப் பல்வேறு வடிவங்களில் கொண்டு செல்ல தமிழருக்கான கொடி தேவை என பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த மறைந்த சி.பா.ஆதித்தனார் தனிக்கொடி தொடர்பாக சட்டசபையில் பேசியிருக்கிறார். இவற்றையெல்லாம்விட முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி டெல்லியில் தனிக்கொடியை அறிமுகப்படுத்தியதாகவும், தேசியக் கொடியோடு தமிழ்நாடு அரசின் கோபுர இலச்சினை யோடு அந்தக் கொடி வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இந்திரா காந்தியை 1970ஆம் ஆண்டில் சந்திக்கும்போது தனிக்கொடி கோரிக்கையை கருணாநிதி முன்வைத்ததாகவும், `அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலங்கள் தனிக்கொடி வைத்திருப்பதை யாரும் தடுக்க முடியாது என்று கூறியதாகவும் ஆவனங்கள் தெரிவிக்கின்றன.
“ஒவ்வோர் ஆண்டும் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியன்று கர்நாடகாவில் தனிக் கொடியை ஏற்றி வருகின்றனர். அதை எதிர்த்து ஒருவர் வழக்கு போட்டாலும் அது அப்படியே நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதுபோல, . ஜம்மு காஷ்மீரீல் தனிக்கொடி உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், மீண்டும் திமுக எம்எல்ஏவால், தனிக்கொடி கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, தமிழகம் என அல்லோலப்பட்டு வரும் நிலையில், இனிமேல் தனிக்கொடி விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.