சென்னை: மீனவர்களுக்கென தனி கூட்டுறவு வங்கி- நவீன மீன் சந்தைகள் – வண்ண மீன்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய   மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,

சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரையில் ரூ.50 கோடியில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும்.

அயிரை மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு அயிரை மீன் ஆராய்ச்சி மையம் ரூ.2.9 கோடியில் அமைக்கப்படும்.

கூட்டுறவு வங்கி போன்று, மீனவர்களுக்கும் வங்கி  சேவையை எளிதில் பெற தனி கூட்டுறவு வங்கி தொடங்க  நடவடிக்கை எடுக்கப்படும்.  கூட்டுறவு வங்கி மூலம் மீனவர்களுக்கு எளிதில் வங்கி சேவைகள் கிடைக்கும்.

நாகை மீன்பிடித் துறைமுகம் ரூ.81 கோடியில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

ரூ.85.53 கோடியில் 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வாங்கப்படும்.

மீன்களை கையாளும் பணிகளுக்காக 393 பயனாளிகளுக்கு ரூ.24.54 கோடியில் மானியம் வழங்கப்படும்.

தூத்துக்குடி அமலி நகர், ஜீவா நகரில் ரூ.83 கோடியில் கடலரிப்பு தடுப்பு, தூண்டில் வளைவு அமைக்கப்படும். குளச்சல் துறைமுகம் ரூ.40 கோடி செலவில் தூர்வாரப்படும். ரூ.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் எனும் புதிய திட்டம் தொடங்கப்படும்.

நெல்லையில் ரூ.5 கோடி மதிப்பில் வண்ணமீன்கள் காட்சியகம் அமைக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.