சீமான் வீட்டு வாசலில் நேற்று ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு அவருடன் வாக்குவாதம் செய்து மல்லுக்கு நின்ற காவலாளி அமல்ராஜை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

காவல்துறையினர் என்று தெரிந்தும் அவர்களை உள்ளே நுழையவிடாமல் மரியாதைக் குறைவாக நடத்தியதோடு இடுப்பில் துப்பாக்கி வைத்துக் கொண்டு திமிறிய அந்த காவலாளியை காவல்துறையினர் சுற்றிவளைத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.

இந்த நிலையில், தனது வீட்டுக்கு காவல்துறையினர் சம்மன் கொடுக்க வருவது குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர்கள் தன்னிடம் நேரில் கொடுப்பார்கள் என்று எதிர்பாத்த நிலையில் அவர்கள் தான் வீட்டு சுவற்றில் ஒட்டிவிட்டு சென்றதாகவும் சீமானின் மனைவி இன்று கூறியுள்ளார்.

மேலும், தனது உத்தரவால் தான் உதவியாளர் அதனை கிழித்தார் என்றும் கூறிய சீமானின் மனைவி கயல்விழி, அதை படிப்பதற்காகவே கிழித்து வர ஆணையிட்டதாகக் கூறினார்.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வழக்குகளில் ஆஜராகுமாறு சம்மன் வருவதால், சீமானுக்கு இனி அழைப்பாணைகள் வந்தால் அதனை ஓட்டுவதற்கு என்று வீட்டின் முன் தனி பலகையை இன்று வைத்துள்ளனர்.

“சம்மனை ஒட்டு சார்வு செய்ய விரும்பும் காவல் அதிகாரிகள் இங்கே ஒட்டிச் செல்லவும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், இனி எந்தவொரு சம்மனையும் கையில் கொடுக்க வேண்டிய சூழல் இருக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.