சென்னை: தொலைதூரம் பயணம் செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில், வெளிமாவட்ட பயணங்களுக்கு இருக்கை வசதி, படுக்கை வசதி மற்றும் குளர்சாதன வசதிகளுடன் கூடிய டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளில் பெண்களுக்கு தனிப் படுக்கை வசதி ஒதுக்கி தமிழகஅரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது
அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு படுக்கை எண் 1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்ய தமிழக போக்கு வரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு போக்குவரத்துதுறை மேலாண் இயக்குநர் உத்தரவின்படி போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் (படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் / குளிர்சாதனமில்லா பேருந்துகள்) பெண்களுக்கு தனியாக படுக்கை எண்,1 LB மற்றும் 4 LB ஒதுக்கீடு செய்து இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இனி வரும் காலங்களில் மேற்படி படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதனை ஒதுக்கீடு செய்து தரவும் மற்றும் பேருந்து புறப்படும் வரை மேற்கூறிய படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர மேற்கூறிய பேருந்துகளில் பணியாற்றும் நடத்துநர்கள் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.