சென்னை

செந்தில் பாலாஜியைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என அவருடைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

அமலாக்கத்துறையால் கடந்த 13ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால்  அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  அவருக்கு அங்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதில் அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது.

எனவே அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.  செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நீதிமன்ற உத்தரவுப்படி அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்ததை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

கடந்த 22 ஆம் தேதி இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்ட போது. செந்தில் பாலாஜியை எதற்காக கைது செய்கிறோம் என்றே சொல்லவில்லை என மேகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜி தரப்பு இடையே காரசாரமாக விவாதங்கள் நடந்த நிலையில் இந்த வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு விசாரணையைத் தொடங்கியது. செந்தில் பாலாஜி மற்றும் அவர் மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சில கருத்துகளை முன் வைத்திருந்தார்.

அவர்

”செந்தில் பாலாஜி சட்டவிரோதமாகக் கைது செய்தது நிரூபணமானது. சட்டவிரோத கைதை அமர்வு நீதிமன்றமும் மனதைச் செலுத்தி ஆராயாமல் இயந்திரத்தனமாக இருந்துள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை. கைதுக்கான மெமோவில் கையெழுத்திடச் செந்தில் பாலாஜி மறுத்தார் என்பதற்கான பதிவுகள் இல்லை. மேலும் இரவு 1.39க்கு கைது செய்துவிட்டு அது குறித்த தகவல் காலை 8.12 க்குத்தான் தெரிவிக்கப்பட்டது.

இந்த கைது தகவலைச் செந்தில் பாலாஜி சகோதரருக்குச் சொன்னதாகக் கூறி ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை அமலாக்கத் துறை இணைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் காலை 8.12 மணி என்றுதான் உள்ளது.  கைது தொடர்பான மெமோ, கைது குறித்த தகவல்கள் அப்போது தயாரிக்கப்பட்டவை அல்ல. காரணமே கூறாமல் ஒருவரைக் கைது செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது”

என்று வாதம் செய்துள்ளார்

நீதிபதிகள் இந்த மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.