சென்னை: சட்டப்பேரவையில் இன்று அமைச்சர்  செந்தில் பாலாஜி துறையைச் சேர்ந்த மருத்துவ கழிவுகள்  மசோதாவை  அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதால் அமைச்சராக பதவி ஏற்ற செந்தில் பாலாஜியை, நீதிபதிகள், ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என முடிவு செய்து வரும் திங்கட்கிழமை ( ஏப்.28-க்குள் ) பதில்  தெரிவிக்க வேண்டும் என்று கெடு விதித்த நிலையில், தனது அமைச்சர் பதவியை துறக்க செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,   செந்தில் பாலாஜிக்கு பதிலாக, அவர் துறை சார்ந்த  மசோதாவை சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்து உரையாற்றினார். பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும் மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி, மருத்துவக் கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறைதண்டனை அளிக்க சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். மருத்துவக் கழிவு பொது சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அண்டை மாநில மருத்துவக் கழிவுகள் நமது மாநிலத்தில் கொட்டப்படுவதாக அடிக்கடி புகார்கள் பெறப்படுகின்றன. மருத்துவக் கழிவுகளை கொட்டினால், விதிகளை மீறியதாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள்,

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி மசோதாவை தாக்கல் செய்வார் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்திருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது.

மேலும்,  இந்த மசோதா மீது ஏப். 29ஆம் தேதி விவாதம் நடைபெற்றால், செந்தில் பாலாஜியால் பதிலளிக்க முடியாது என்பதால்தான், மாற்று ஏற்பாடாக, இன்று அமைச்சர் ரகுபதி, மசோதாவை தாக்கல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. இதனை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மெரிட் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை, விசாரணையில், அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது.

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என முடிவு செய்து வரும் ஏப்.28-க்குள் தெரிவிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தது. இந்த நிலையில்தான், திங்கள்கிழமைக்குள், அமைச்சர் பதவியை செந்தில்பாலாஜி ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவேதான், இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா மீது வரும் 29ஆம் தேதி விவாதம் நடைபெறும் என்ற சூழலிலேயே, அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?  ஜாமீனா?  அமைச்சர்  பதவியா?  உச்சநீதிமன்றம் இறுதி கெடு