சென்னை: கடந்த ஓராண்டுக்கும் மேலாக  புழல் சிறையில்  அடைக்கப்பட்டுள்ள  திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று மீண்டும்  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து  அவர்  ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த, முன்னாள் திமுக அமைச்சர்,  செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்ற நிலையில், அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது.  கைது நடவடிக்கையின் போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஓராண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் தண்டனை பெற்று வரும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி சய்யப்பட்டது. மேலும், அவரது வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை வருமான வரிதுறை பல முறை சோதனை நடத்தியது. இதில் கிடைத்த ஆவணங்கள்படி, அவரது தம்பி அசோக்கை  விசாரணைக்கு அழைத்தது. ஆனால், அவர் திடீரென மாயமானார். கடந்த ஒராண்டாக அவர் தலைமறைவாக உள்ளார். அவரது தம்பியை  உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டபோதும் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் கடந்த ஓராண்டாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அதிகாரிகள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்துரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்