சென்னை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 56 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் பணி பெற்று தருவதாக பலரிடமும் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னைமத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி பணமோசடி வழக்கின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை தொடங்கியது. குற்றச்சாட்டு பதிவின் போது, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இன்று சாட்சிகளின் குறுக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் முதல் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ்குமாரிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.

குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இதன் மூலம்  56 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.