சென்னை: செந்தில் பாலாஜியின் நாடகமும் நடிப்பும் முடிவுக்கு வந்தது. “இன்று; cash for jobs ஊழலுக்கு விசாரணை..நாளை; ஒரு லட்சம் கோடி டாஸ்மாக் ஊழலுக்கு விசாரணை..  என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 19 மதுபான உற்பத்தி ஆலைகளிலிருந்து அரசுக்கு வரி செலுத்தாமல் 40% உற்பத்திக்கு மேல் கள்ளச் சந்தைக்கு அனுப்பியதால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு. நாடகமும் நடிப்பும் முடிவுக்கு வந்தது.! E.Dயின் பிடிக்குள் வந்த செந்தில் பாலாஜி வந்துள்ளார் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்தது.அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியது. இதையடுத்து, நேற்று மாலை அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து, சாஸ்திரி பவன் அழைத்துச்சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

இகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இன்று; cash for jobs ஊழலுக்கு விசாரணை..நாளை; ஒரு லட்சம் கோடி டாஸ்மாக் ஊழலுக்கு விசாரணை..

செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது; அவருடைய துணைவியார் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு செல்லத் தகாதது எனத் தீர்ப்பு கூறி, மேலும் அமலாக்கத்துறை அவரை ஐந்து நாட்கள் custody-ல் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துக் கடந்த மூன்று மாத பரபரப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆளும் மாநில அரசு மற்றும் ஆளுங்கட்சியின் பின்புலத்தோடு அமலாக்கத் துறையின் விசாரணையை சில நாட்களுக்குத் தள்ளிப் போட முடிந்ததே தவிர, தவிர்க்கவும் முடியவில்லை; தப்பிக்கவும் முடியவில்லை. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டபோது ஆளுங்கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் ”குய்யோ முறையோ” என்று கூச்சலிட்டார்கள். இது மத்திய அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று கோவையில் கூடி ஒருசேரக் கைகோர்த்தார்கள். அமலாக்கத் துறையின் அழுத்தத்தால் தான் இதயத்தில் மூன்று முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு வந்தது என்று மருத்துவ உலகமும் வியக்கத்தகும் வகையில் சர்வ ரோக நிவாரணியான திராவிட மாடல் கூச்சல் போட்டது.

‘அரசியல் வேறு; சட்டம் வேறு’ என்பதை சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவர் தெள்ளத்தெளிவாக விளக்கினார். மூன்றாவது நீதிபதியும் அதைத் தெளிவுபடுத்தினார்.

உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் செந்தில் பாலாஜி தரப்பிலான எல்லா வாதங்களையும் நிராகரித்துவிட்டு, அமலாக்கத் துறையின் நடவடிக்கை சட்டப்பூர்வமானது எனவும், ஒருவரைக் கண்ணெதிரே நீதிமன்ற காவலில் வைத்துக் கொண்டே நேர் முரணாக ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய முடியாது; அது செல்லுபடி ஆகாது எனவும் தீர்ப்பளித்து அவரை ஐந்து நாட்கள் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உட்படுத்தவும் அனுமதி அளித்த சில மணி நேரத்திற்குள்ளாகவே செந்தில் பாலாஜி E.D-ன் பிடிக்குள் போனார். இதற்கு மேலும் திராவிட மாடல் ஊழல் பெருச்சாளி கூட்டம் செந்தில் பாலாஜியின் கைது அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று கூற இயலாது.

2011-2016 வரையிலும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஏழை, எளிய, மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த வேலை தேடிச் செல்லும் ஓட்டுநர், நடத்துநர்களிடமிருந்து லஞ்சமாக தலா 5 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பெற்று, அது வெளிச்சத்திற்கு வந்த பிறகு லஞ்சம் பெற்ற பணத்தை ஒரு சிலருக்கு மட்டும் திருப்பிக் கொடுத்து வழக்கை முடித்துக் கொள்ள முயற்சி செய்தார்; இன்னும் பணம் கிடைக்காத பலரும் உச்சநீதிமன்றத்தை நாடினார்கள். லஞ்ச பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது. அப்படியே திருப்பிக் கொடுத்திருந்தாலும் ’ஊழல் ஊழலே’. எனவே அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், மாநில காவல்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காமல் விசாரணை சரியான திசையை நோக்கிச் செல்லவில்லை எனில், அமலாக்கத்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து இரண்டு மாத காலத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியே அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொண்டது. பல நாட்கள் திரட்டப்பட்ட சட்டவிரோத பணப் பரிமாற்றம் உட்பட கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதை தி-ஸ்டாக்கிஸ்ட் குடும்பம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியது.

மேலும், அமலாக்கத் துறையின் விசாரணையில் செந்தில் பாலாஜி எல்லாவிதமான உண்மைகளையும் எங்கே வெளியே சொல்லிவிடுவாரோ என்று தி-ஸ்டாக்கிஸ்ட் குடும்பத்தினர் அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள். அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் இதயத்தில் மூன்று அடைப்புகள் ஏற்பட்டதாகக் கூறி திராவிட மாடல் குடும்ப மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அடைப்பை நீக்க மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள் குறித்த உண்மைத் தன்மைகளும் இத்துடன் வெளிச்சத்திற்கு வரலாம்.

செந்தில் பாலாஜி மீதான cash for jobs என்பது மெகா ஊழல் குற்றச்சாட்டே!. செந்தில் பாலாஜியின் TASMAC மெகா மெகா ஊழல் குறித்து மே 10 ஆம் தேதி பேரணியாகச் சென்று ஆளுநரிடத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக புகார் அளித்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள 19 மதுபான உற்பத்தி ஆலைகளிலிருந்து அரசுக்கு வரி செலுத்தாமல் 40% உற்பத்திக்கு மேல் கள்ளச் சந்தைக்கு அனுப்பியதால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு.

கடந்த மே 2021 முதல் 2023 மே மாதம் வரை நடத்திய சட்டவிரோத பார்கள் மூடப்படும் வரையிலும் 24 மாதங்கள் செந்தில் பாலாஜியால் 5362 பார்களில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளை அடித்தது.

தலா 50 லட்சம் என 2000-த்திற்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் பெரும் ஊழல்.

மதுபானங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஊழல், அட்டைப்பெட்டியை சேகரிப்பதில் ஊழல், காலிப் பாட்டில் சேகரிப்பு மற்றும் விற்பனையில் ஊழல்.

என செந்தில் பாலாஜியின் இரண்டாவது அத்தியாயம் ஒரு லட்சம் கோடி ஊழல் மற்றும் அதனுடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்து E.D-ன் விசாரணையும் விரைவில் வரும்.

”சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது” என்பதற்கு ஏற்ப செந்தில் பாலாஜி CASH FOR JOBS ஊழல் முதல் அத்தியாயத்திலும் தப்ப முடியாது.! ஒரு லட்சம் கோடி TASMAC ஊழல் இரண்டாவது அத்தியாயத்திலும் தப்பிக்க முடியாது.!”

இவ்வாறு  அதில், கூறப்பட்டுள்ளது.

https://patrikai.com/enforcement-department-in-questioned-to-senthil-balaji-on-2nd-day/