சென்னை: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பட்டு உள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணை தொடர்பான புதிய அறிக்கையை மே 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு வேலை பெற்றுத் தர லஞ்சம் வாங்கியதாகச் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ஒய்.பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 28ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி விவகாரத்தில் 4 வழக்குகள் உள்ளதாகவும், அதில் ஒரு வழக்கில் மட்டும் அதிக சாட்சிகள் உள்ளதால், அதனைத் தனியாக விசாரிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார். மேலும் 3 வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்குகளில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி வழக்கு விசாரணை தேதியை முடிவு செய்ய வேண்டும் என எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மே 2-ம் தேதிக்குள் வழக்கு விசாரணை தொடர்பான புதிய அறிக்கையைச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.