சென்னை: சென்னையில் இன்று அதிகாலை அரசு பேருந்து மீது  ராட்சத கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லாததால் ஓட்டுநர் சிறிய காயத்துடன் தப்பினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பெரும்பாலான சாலைகள், மழைநீர் வடிகால் பணி மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளன. மேலும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலும் உள்ளன. இந்த நிலையில், சென்னைவடபழனி அருகே மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன், அந்த வழிழகு வழியாக வந்த அரசு பேருந்து மோதியது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் நடைபெற்றது. ராட்ச கிரேன் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த வழியாக வந்துகொண்டிருந்த  159a எண் கொண்ட அரசு பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி மற்றும் இடதுபுறம் முழுவதுமாக சேதமடைந்தது. பயணிகள் இல்லாமல் சென்ற பேருந்து என்பதால், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனால், விபத்தில் பேருந்தை ஓட்டி வந்த பழனி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சேதமடைந்த பேருந்தை வடபழனி போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர், விபத்து நிகழ்ந்தது தொடர்பாக கிரேனை இயக்கிய வடமாநிலத்தை சேர்ந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தூக்க கலக்கத்தில் கிரேனை இயக்கியதால் விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.