வருவாய் துறை மீது செம கோபம் ஏன்?
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
மீப காலமாக நாம் வருவாய் துறைக்கு எதிராக கடுமையான விமர்சனம் வைப்பதை கண்டு சிலர் இன்பாக்ஸில் வந்து உங்களுக்கு ஏதேனும் சொந்த பிரச்சினையா என்று கேட்கிறார்கள்..
நமக்கென சொந்தமாக வீடு, ஏன் ஒரு சதுரஅடி நிலம் கூட கிடையாது. ஆனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலரின் பட்டா மற்றும் நில அளவை பிரச்சினைகளுக்காக வெவ்வேறு மாவட்ட வருவாய் துறை அலுவலகங்களை நாட வேண்டியதாயிற்று. அப்போதுதான் ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது. பட்டா விஷயத்தில் நீண்டகாலமாக தாலுகா, கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்களுக்கு நாயாய் பேயாய் அலைபவர்கள் யார் என்று பார்த்தால் பட்டா பெயர் மாற்ற குளறுபடியால் அவதிப்படுபவர்கள்.
அதாவது, பட்டா விபரங்களை கம்ப்யூட்டரில் ஏற்ற ஆரம்பித்தபோது பெயர்களை ஊழியர்கள் சகட்டுமேனிக்கு மாற்றி மாற்றி ஏற்றியிருக்கிறார் கள். இது முழுக்க முழுக்க அவர்களின் தவறு. ஆனால் நடப்பது என்ன தெரியுமா? தவற்றை சரி செய்ய உரிமையாளர்கள்தான் பணத்தைக் கட்டிவிட்டு அலுவலகங்களுக்கு முறையிட வேண்டும்.
ஒரு உதாரணத்திற்கு சொல்கிறோம். குப்புசாமி என்ற பெயரை அக்கம்பக்கத்து சர்வே எண்ணில் உள்ள கந்தசாமி என்பவரின் பெயருக்கு மாற்றி ஏற்றி விடுகிறார்கள். பெயரை மாற்றச் சொல்லி முறையிட்டால் கந்தசாமிக்கு சம்மன் அனுப்பி அவரை வரவழைத்து விசாரித்த விசாரித்த பிறகு ஒரு முடிவுக்கு வர முடியும் என்று சொல்வார்கள். அதாவது வருவாய்த்துறை ஊழியர்கள் செய்த குளறுபடிக்கு சம்பந்தமே இல்லாத கந்தசாமியும் விசாரணைக்கு வந்து சொல்லிவிட்டு போக வேண்டும்.
எங்கேயாவது இப்படி ஒரு அக்கப்போர் நடக்குமா?
இங்கே ஒரு நேரடி அனுபவத்தை சொல்கிறோம். ஒரு கோட்டாட்சியர் பட்டா தொடர்பாக நிலத்தின் உரிமையாளரை அழைத்து விசாரிக்கிறார். எல்லா விவரங்களையும் எழுத்துப்பூர்வமாக கேட்டு எழுதியும் வாங்குகிறார். வீட்டுக்குப் போங்கள் உங்கள் பெயருக்கு பட்டா மாற்றிய தகவல் வரும் என்கிறார். கொஞ்ச நாளில் அந்தக் கோட்டாட்சியர் மாறிவிடுகிறார். புதிதாக அந்த சீட்டிற்கு ஒருவர் வருகிறார். அவரும் விசாரணை என்று சில மாதங்கள் அலைக்கழித்து விவரங்களை எழுதி வாங்குகிறார் . கொஞ்ச நாளில் அவரும் மாற்றலாகி விடுகிறார்.
இப்படியே சில ஆண்டுகளில் கோட்டாட்சியர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். நிலத்தின் உரிமையாளரும் கோட்டாட்சியர் அலுவலகம் அழைக்கும் போதெல்லாம் தவறாமல் சென்று விளக்கங்களையும் கொடுத்தபடியே இருக்கிறார்.. கடைசி கட்ட நிலவரம் என்னவென்றால், பட்டா தொடர்பான ஆவணத்தில் கையெழுத்து இடுவதற்கு முன் நாள் கோட்டாட்சியர் மாற்றப்படுகிறார். அதனால் மறுபடியும் முதலிலிருந்து என்கிறார் கள்.
கோட்டாட்சியர் மாறிவிட்டால் அவர் விசாரித்த விஷயம் செல்லுபடியாகாதா?
பூர்வீக சொத்து விஷயத்தில் இப்படி தொடர்ந்து விளக்கம் மேல் விளக்கம் என எழுதிக் கொடுப்பவர் சாமானியர் அல்ல. அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். அவருடைய சகோதரரும் பணியில் உள்ள ஒரு அதிகாரி. பணத்தைக் கொடுக்காமல், எவ்வளவு காலம் ஆனாலும் நேர்மையாக பட்டா விஷயத்தில் தீர்வு காணலாம் என்று இருப்பவர்களின் நிலைமை தமிழ்நாட்டில் இதுதான்..
அரசு அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் சாமானியர்களின் பாட்டைப் பற்றி சொல்லவா வேண்டும்..?
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள ஒரு விவசாயி வீடு நில அளவை தொடர்பாக கொடுத்த மனு கிடப்பிலேயே இருக்கிறது. எவ்வளவு நாள் தெரியுமா? ஓராண்டாக.. எல்லா துறையிலும் புதிய விஷயங்களை பெறுவதற்காக தான் பொதுமக்கள் அல்லல்படுவார்கள்.. ஆனால் தமிழ்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஊழியர்கள் செய்யும் தவறுக்காக அதிக அளவில் பொதுமக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதில் முதலிடம் வருவாய்த்துறையால்தான்.
கடந்த ஓராண்டாக துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சில வாரங்களுக்கு முன்பு, பட்டா, நில அளவை போன்ற விஷயங்கள் மீது தீர்வு காண்பதற்கு காலம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சொன்னார். அதன்பிறகு அந்தப் பேச்சையே காணோம்.. நம்மை கேட்டால் இந்த பட்டா போன்ற விவகாரங்களை வருவாய் துறையிடம் இருந்து பிரித்தெடுத்து, நில பராமரிப்பு ஆவணத்துறை என ஒரு அமைப்பை உருவாக்கி விட்டு போகலாம்.
வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என மாறி மாறி மக்கள் அலைவதற்கு இந்த ஆட்சியிலாவது முடிவு கட்டலாம்.